நடிகர் சூரியின் படங்கள் வரிசையாக சர்வதேச அளவில் திரையிடப்பட்டு வருகின்றன. உலக ரசிகர்கள் இவரின் பின்னணி அறிந்து பெரும் ஆச்சர்யமடைந்தனர். இதுகுறித்து சூரி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
சூரி ஒரு காமெடியனாக சினிமாவிற்குள் நுழைந்து, பரோட்டா சூரியாக நம்மில் அறிமுகமானார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவர், மற்ற காமெடி நடிகர்களை போல கடைசிவரை நகைச்சுவை நடிகரகாவே இருப்பார் என்றே ரசிகர்கள் கணித்தனர். ஏனெனில், நகைச்சுவை நடிகராக இருந்து வந்த சந்தானம், திடீரென்று ஹீரோவாக களமிறங்கியது, ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்த பயம் சூரியிடமும் இருந்தது. ஏனெனில், சந்தானம் போலவே சூரியும் ஹீரோவாக நடித்து, அந்தப் படங்கள் அவ்வளவாக ஹிட் கொடுக்காதோ என்ற பயம் இருந்தது. ஆனால், விடுதலை பாகம் 1 படம் அவரின் வாழ்க்கையையே மாற்றியது. திறமையும் தரமான கதையும் இணைந்தால், யாராயினும் ஹீரோவாக மாறலாம் என்பதை நிரூபித்தார், சூரி.
நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம் 1 படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் சூரியின் அசுரத்தனமான நடிப்பிற்கும் நல்ல பெயர் கிடைத்தது. இதனால், வெற்றிமாறனின் விடுதலை படம், சூரியின் விடுதலை படமாக மாறியது. அந்த அளவிற்கு விடுதலை படம் சூரியின் அடையாளமாக மாறியது.
அடுத்ததாக சூரி நடித்த கருடன் படமும் வெளியானது. சசிகுமார் படத்தில் சூரி நடித்தார் என்று ரசிகர்கள் பேசியதுபோய், தற்போது சூரி படத்தில் சசிகுமார் நடிக்கிறார் என்று பேச ஆரம்பித்தனர். இதுவே சூரியின் அசுர வளர்ச்சியின் அடையாளமாகும். விடுதலை படத்தை முடித்த கையோடு விடுதலை 2, கொட்டுக்காளி மற்றும் ஏழு கடல் ஏழுமலை என அதிரடியாக மூன்று படங்களில் கருடன் படத்துக்கு முன்பாகவே நடித்து முடித்துள்ளார்.
அதிலும், சூரி நடித்த விடுதலை 1 மற்றும் 2, கொட்டுக்காளி படங்கள் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்க்ரீன் செய்யப்பட்டன. பெர்லின் திரைப்பட விழாவில் ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் போட்டி போட்டது. ஒரே ஆண்டில் 3 படங்கள் இப்படி தேர்வாவது பெரிய விஷயம் என சூரி பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “அந்த மூன்று படங்களையும் தொடர்ந்து பார்த்த சர்வதேச ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். சினிமாவை ரொம்பவே விரும்பி பார்ப்பவர்கள் எல்லாம் ரோட்டர்டாமுக்கும் வந்திருந்தனர். அங்கிருந்து 6 மணி நேரம் டிராவல் ஆகி செல்லும் பெர்லின் திரைப்பட விழாவிலும் வந்து படங்களை பார்த்தனர். 3 படங்களிலும் என்னை பார்த்த சில ரசிகர்கள் இவர் என்ன இந்தியாவிலேயே பெரிய நடிகரா என விசாரிக்க ஆரம்பித்து என்னிடம் பேச ஆரம்பித்து விட்டனர்.
நான் இப்போதான் நடிக்கவே ஆரம்பிச்சிருக்கேன் என்பது அவர்களுக்கு தெரியாது. ஆனால், சர்வதேச அளவில் ரசிகர்கள் நம்முடைய நடிப்பை பாராட்டும் போது எதையோ பெரிதாக சாதித்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது. தொடர்ந்து இது போன்ற நல்ல படங்களில் நடித்தால் போதும் என்கிற எண்ணமும் தோன்றியது.” என சூரி பேசினார்.