HBD வாலி - ரங்கராஜன் வாலியாக மாறியதன் சுவாரசியப் பின்னணி !

அக்டோபர் 29 - கவிஞர் வாலி பிறந்தநாள்!
Vaali
VaaliImg Credit: The Hindu
Published on

தமிழ் சினிமாவில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்திருப்பவர் கவிஞர் வாலி. தன்னம்பிக்கை, தத்துவம், காதல், வீரம், சோகம், பாசம், குறும்பு, கேலி, கிண்டல், பக்தி, விழிப்புணர்வு என வாழ்க்கையில் அவர் தொட்டுச் செல்லாத உணர்வுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அற்புதமான பல பாடல்களை எழுதி இருக்கிறார். அவ்வாறு பாடல்கள் எழுதுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடகங்களையும் திரைப்பட வசனங்களையும் எழுதி இருக்கும் கவிஞர் வாலியின் பெயர் பின்னணி பற்றிய சுவாரசியத்தை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எம்ஜிஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்கு பாடல் எழுதிய இந்த மாபெரும் கவிஞரின் இயற்பெயர் ரங்கராஜன். கவிதை புனைவதில் பெரும் வல்லவரான வாலி ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிறு வயது முதலே ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட வாலிக்கு அன்றைய காலகட்டங்களில் தமிழ் இதழ்களில் மிகச் சிறப்பான ஓவியங்களை மறைந்த மாபெரும் ஓவியரான மாலியின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. உயிரும் உணர்ச்சியும் நிறைந்த சித்திரங்களை கண்முன் நிறுத்தும் ஓவியர் மாலியின் மீது உள்ள ஆர்வத்தில் அவரைப் போலவே ஆக வேண்டும் என்று தன் நண்பரான பாபுவின் ஆலோசனைப்படி தன் பெயரை வாலி என மாற்றிக் கொண்டார் ரங்கராஜன்.

இதற்கு முன் எந்த தமிழ் இதழ்களிலும் இப்படிப்பட்ட ஓவியங்கள் வந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு அற்புதமான ஓவியங்களை வரைந்த மாலியின் கை வண்ணத்தால் ஈர்க்கப்பட்ட கவிஞர் வாலி சென்னையில் உள்ள School Of Arts ல் சேர்ந்து ஓவியமும் பயின்றார். பின் மீண்டும் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கே சென்று அங்கு விளம்பர நிறுவனம் ஒன்றை தொடங்கினார். ஆனால் அதில் சரியான வருமானம் வராததால் ஒருமுறை தனது நண்பருடன் நாடகம் பார்க்க சென்றிருந்தபோது அந்த நாடகத்தில் உள்ள வசனத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டு  நாடகங்களை எழுதுவதில் ஆர்வம் காட்ட தொடங்கினார். அப்படி அவர் வசனம் எழுதி அரங்கேற்றம் செய்த நாடகங்களில் முதன்மையான மற்றும் மிகுந்த அளவில் பேசப்பட்ட நாடகம் தான் தளபதி.

இருப்பினும் அதில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவுக்கு பாட்டு எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னைக்கு வந்தார். பல்வேறு இசையமைப்பாளர்களை சந்தித்து வாய்ப்புகள் கேட்டும் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என முடிவெடுத்தார். அப்பொழுது பிரபல இசையமைப்பாளரான எம்.பி ஸ்ரீனிவாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ஒரு பாடலின் வரிகளை அவரிடம் வாசித்துக் காட்ட அந்த இசையமைப்பாளர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லையாம். பின் நாட்களில் அவரிடம் வாசித்துக் காட்டிய அதே வரிகளை தான் படகோட்டி என்ற படத்தில் பயன்படுத்தி மாபெரும் வரவேற்பை பெற்றார் கவிஞர் வாலி. அவை தான் "கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்" என்ற பிரசித்தி பெற்ற வரிகள்.

பாடல்கள் எழுதுவதற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத காலகட்டங்களில் ஒரு முறை கவியரசர் கண்ணதாசனிடமிருந்து உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு வந்ததாம். ஆனால் கவிஞர் வாலி தானும் ஒரு  பாடலாசிரியராகவே விரும்புவதால் இன்னொரு பாடல் ஆசிரியரிடம் பணி செய்வது ஏற்புடைய செயல் அல்ல என்று கருதி அதனை மறுத்து விட்டாராம். அதன் பின்பு அழகர் மலைக்கள்ளன், எம்ஜிஆர் நடித்த நல்லவன் வாழ்வான் போன்ற  படத்தில் தொடங்கி பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை எழுதினார். 

இதையும் படியுங்கள்:
LCU-வில் இணையும் சிவகார்த்திகேயனின் மாவீரன்!
Vaali

சிறப்பான சொற்கோர்வை, சந்தம் என  தமிழ்  இலக்கணத்தின் அத்தனை கூறுகளையும் சிறப்பாக கையாண்ட கவிஞர் வாலி தாயைப் பற்றி எழுதியுள்ள அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, தாய் இல்லாமல் நான் இல்லை, நானாக நான் இல்லை தாயே, ஆசைப்பட்ட எல்லாத்தையும் போன்ற பாடல்கள் எல்லாம் இன்றளவும் நம்மை தாலாட்டிக் கொண்டு தான் இருக்கின்றன. அதைப் போலவே  கற்பகம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'மன்னவனே அழலாமா', 'அத்தை மடி மெத்தையடி', அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இடம் பெற்று 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்' தளபதி படத்தில்  இடம் பெற்ற அனைத்து பாடல்கள், மௌன ராகம் திரைப்படத்திலிருந்து 'மன்றம் வந்து தென்றலுக்கு', காதல் தேசம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'என்னை காணவில்லையே நேற்றோடு', காதலர் தினத்தில் இடம் பெற்ற 'என்ன விலை அழகே', சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இடம் பெற்ற 'முன்பே வா என் அன்பே வா' , எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற 'மின்வெட்டு  நாளில் இங்கே'  போன்ற பாடல்கள் எல்லாம் காலம் கடந்தும் இன்றும் காவியங்களாக நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன! 

'ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்'

 - என்று ஒவ்வொரு வெற்றியாளனுக்கும் அவனைப் பின்னிருந்து இயக்கக்கூடிய சிறப்பான வழிகாட்டி அமைந்தால் எத்தகைய சாதாரண மனிதனும் சாதனையாளனே! என்பதை தன்னுடைய கவிதைகளால் வலியுறுத்தி காட்டிய கவிஞர் வாலி இன்றளவும் தன்னுடைய வரிகளால் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com