நடனமும் நடிப்பும் இவரின் இரு கண்கள்!

HBD Shobana – ஷோபனா பிறந்த நாள்!
ஷோபனா
ஷோபனா

சுமார் முப்பது ஆண்டுகள் முன்பு வரை தமிழ் சினிமாவில் அறிமுகமான பல கதாநாயகிகளுக்கு சாஸ்திரிய நடனம் தெரிந்திருந்தது. சினிமாவில் நுழைவதற்கு நடனம் குறிப்பாக பரத நாட்டியம் முக்கிய தகுதியாக பார்க்கப்பட்ட காலமும் உண்டு. லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள், வைஜெயந்தி மாலா, பானுப்ரியா, ரேவதி இப்படி பல கதாநாயகிகள் நடிப்போடு நடன திறமையையும் வெளிப்படுத்தியவர்கள். இந்த வரிசையில் நடனத்திற்காகவும், நடிப்பிற்காகவும்  தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷோபனா. ஷோபனா அவர்களின் பிறந்தநாள் இன்று மார்ச் 21. 

புகழ் பெற்ற  லலிதா, பத்மினி, ராகினி  சகோதரிகள் ஷோபனாவிற்கு அத்தை உறவு முறை ஆவார்கள். குடும்பமே கலைக்குடும்பமாக இருந்ததால் இயல்பாகவே கலை மீது ஷோபனாவிற்கு ஆர்வம் இருந்தது ஆச்சர்யமில்லை. பத்மா சுப்பிரமணியம், சித்ரா விஸ்வேஸ்வரன் போன்ற புகழ்பெற்ற நடன கலைஞர் களிடம் நடனம் கற்றுக்கொண்டார்.

ஷோபனா 1980களில் சினிமாவில் நுழைந்தார். ஆடூர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன், பாசில் போன்ற மலையாள சினிமாவில் ஆளுமை மிக்க இயக்குநர்களின் பெண் பாத்திரப் படைப்புகளுக்கு வடிவம் தந்தார் ஷோபனா. மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் 1980கள் சினிமாவில்  ஆரம்ப காலமாக இருந்ததால் இந்த இருவருடன் பல படங்கள் இணைந்து நடித்தார் ஷோபனா. மணிசித்ரதாள், தேன் மாவின் கொம்பத்து போன்ற படங்கள் மலையாளத்தில் இன்றளவும் பேசப்படும் படங்களாகும். மங்கள நாயகி படம் மூலம் தமிழில் அறிமுகமான ஷோபனா,  எனக்குள் ஒருவன், மல்லுவேட்டி மைனர், வாத்தியார் வீட்டு பிள்ளை, பொன்மன செல்வன் உட்பட பல படங்களில் நடித்தார்.

மலையாள சினிமாவை போன்று  தமிழ் சினிமா ஷோபனாவின் நடிப்பு திறமையைப் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில்தான் மாறுபட்ட ஷோபனாவை பார்க்க முடிந்தது. மலையாளத்தில் இருந்து வரும் ஹீரோயின்கள் இயல்பாகவே நகைச்சுவை நடிப்பில் பிரமாதப் படுத்துவார்கள். ஊர்வசி, கல்பனா போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஷோபனா இது நம்ம ஆளு படத்தில் பாக்யராஜூடன் காமெடியில் தனி முத்திரை பதித்து இருப்பார். கேரளா அரசின் பல திரைப்பட விருதுகளையும், ஒரு முறை தேசிய விருதையும் பெற்றவர். 

ஷோபனா
ஷோபனா

பொதுவாக சினிமாவை விட்டு விலகியபின் ஹீரோயின்கள் என்ன செய்வார்கள். சில ஆண்டுகள் கழித்து அம்மா, அண்ணி கேரக்டரில் நடிக்க வருவார்கள். சீரியல்களில் நடிக்க வருவார்கள். (இப்போது முன்னாள் கதாநாயகிகள் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது வேறு விஷயம்!) ஆனால் ஷோபனா பிசியாக நடித்து கொண்டிருக்கும்போதே தான் அறிந்த நடனக் கலை மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் 'காலர்ப்பனா '  என்ற நடனப் பள்ளியை சென்னையில்  துவங்கினார். இப்பள்ளி மூலம் பல்வேறு மாணவர்களை உருவாக்கி உலகம் முழுவதும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். நாட்டிய நாடகம் வகையிலான வடிவத்தில் நிகழ்ச்சிகளை வடிவமைக்கிறார்.

கடந்த 1999ஆம் ஆண்டு பிரபு தேவா, ரஹ்மானுடன் இணைந்து  ஜெர்மனியில் மைக்கேல் ஜாக்சன் அண்ட் பிரண்ட்ஸ் என்ற இசை நிகழ்ச்சி நடத்தி உலகளவில் புகழ் பெற்றார் ஷோபனா. இவரது சேவையை பாராட்டும் வகையில் நமது இந்திய அரசு 2006ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது. 

200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், பல்வேறு மாறுபட்ட நடன நிகழ்ச்சிகள் என சாதனை பெண்மணியாக திகழ்ந்துவரும் ஷோபனா அவர்கள் இன்னும் பல சாதனைகள் புரிய இந்த பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நமது மங்கையர் மலர் இதழுக்காக ஷோபனா அளித்த பேட்டியிலிருந்து சில துளிகள்...

ஷோபனா
ஷோபனா

உங்கள் அத்தை நாட்டியப் பேரொளி பத்மினியிடம் இருந்து என்னக் கற்றுக்கொண்டீர்கள்?

பண்பு, அன்பு. இவையனைத்தையும்விட பெரிய ஸ்டாராக இருந்தபோதும் ஈகோ இல்லாத குழந்தைத்தனத்தைக் கற்றுக்கொண்டேன்.

ஏன் இப்போது சினிமாவில் நடிப்பதில்லை?

என்னிடம் 145 பேர் வரை நடனம் கற்றுக்கொள்கிறார்கள். இதில் பத்து பேர் ஆண்கள். நடனப் பள்ளியிலேயே எனது நேரம் சரியாக இருக்கிறது. பள்ளியை ஆரம்பித்தால் மட்டும் போதாது. மாணவர்கள் மீது சிரத்தையாக அக்கறை செலுத்தவேண்டும். அதனால்தான் சினிமாவுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறேன். 'போடா போடி படத்தில் சிம்புவுக்கு சால்ஸா சொல்லித்தரும் டீச்சராக நடிக்கிறேன்.

ரஜினி, கமல்...

ரஜினி சாரின் 'கோச்சடையான்’ படத்தில் ஒரு கேரக்டர் செய்கிறேன். ரஜினியைச் சந்தித்தபோது ஒரு குழந்தை பகிர்ந்துகொள்வதைப் போல ஆர்வத்துடன் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். சூப்பர் ஸ்டாருக்குள் இருக்கும் வெள்ளை உள்ளத்தை ரசித்தேன். 'விஸ்வரூப’ கமல் சாரைப் பார்த்து பிரமிக்கிறேன். அவரது 'கதக்' நாட்டியத்தைப் பார்க்க உங்களைப் போலவே ஆர்வமாக இருக்கிறேன்.

இதையும் படியுங்கள்:
நயாகரா நீர்வீழ்ச்சியை வற்ற வைத்ததன் காரணம் தெரியுமா?
ஷோபனா

பரத நாட்டியம் கற்றுக்கொள்வது காஸ்ட்லியான விஷயமாகப் பார்க்கப்படுகிறதே...

‘ஸ்டார் நைட் ஷோ' நிகழ்ச்சிகளுக்கு ஐயாயிரம் பேர் வந்தால் பரத நாட்டியத்துக்கு ஐந்நூறு பேர்தான் வருகிறார்கள். இதற்கானக் காரணத்தை நாம் இப்போது ஆராய வேண்டாம். நடன ஆசிரியரும் வாழ்க்கை நடத்த வேண்டுமே? பெரும்பான்மையான ஆசிரியர்கள் அதிகக் கட்டணம் வாங்குவது கிடையாது. பல்வேறு பொருளாதாரப் பின்னணி கொண்ட என் மாணவர் களிடமிருந்து நியாயமான கட்டணம்தான் வாங்குகிறேன். இன்றைய சூழலில் பரத நாட்டியத்தை முழு நேரமாக எடுத்துச் செய்' என்று சொல்ல தைரியமில்லை. இருப்பினும் எட்டு மாணவிகள் கேரளாவிலிருந்து இங்கு வந்து முழு நேரமாக நாட்டியம் பயில்கிறார்கள்.

மறக்க முடியாத பாராட்டு...?

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்னுடைய நாட்டியத்தைப் பார்த்துவிட்டு, எழுத்துப்பூர்வமாகப் பாராட்டைத் தெரிவித்தார். மறக்க முடியாத பாராட்டு இது.

உங்கள் குடும்பம் பற்றி...?

இந்த நடனப் பள்ளியும், இங்குள்ள மாணவ - மாணவிகளும்தான் என் குடும்பம். முழுக்க முழுக்க கலைக்கே அர்ப்பணம் செய்துகொண்ட இந்த வாழ்க்கை மீதான பிரேமை எனக்குக் குறையவே யில்லை!"

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com