மக்களின் ரசனையை வளர விடாமல் தடுக்கிறதா அதிக பட்ஜெட் படங்கள்!

Good Films
High Budget films
Published on

பெரிய பட்ஜெட் படங்கள் அதிகளவில் வெளிவரும் இன்றைய காலகட்டத்தில், எதார்த்தமான கதைகளை ரசிக்கும் மக்களின் மனநிலையும் மாறி வருகிறது. இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய விஷயம். எதார்த்தமான கதைகள் குறைந்து வருவதும், மக்களின் ரசனை குறைவதும் தொடர்கதையாகி விட்டது.

இன்றைய காலத்தில் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் வணிக நோக்கத்திற்காகவே திரையிடப்படுகின்றன. அதிலும் பெரிய நடிகர்களின் படங்கள் முற்றிலும் அப்படித் தான் இருக்கின்றன. எதார்த்தமான கதைக்களங்கள் தமிழ் சினிமாவில் குறைந்து வருவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆண்டிற்கு மிகக் குறைந்த அளவில் தான் எதார்த்தம் நிறைந்த படங்கள் வெளிவருகின்றன. அதில் ஏதாவது ஓரிரு படங்கள் தான் மக்களைச் சென்றடைகின்றன.

நல்ல கதைக்களத்தைக் கொண்ட படங்கள் மக்களைச் சென்றடையாததற்கு முக்கிய காரணமே பெரிய பட்ஜெட் படங்கள் தான். ஏனெனில் ரசிகர்கள் பலரும் சூப்பர் ஹீரோ படங்களைத் தான் அதிகளவில் ரசிக்கின்றனர். அதற்கேற்ப இயக்குநர்களும் செயல்படுகின்றனர். ஆனால் ஓரிரு இயக்குநர்கள் மட்டும் தங்களது கதைக்களத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். அதனால் தான் இன்றும் எதார்த்தமான திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு கடைசி விவசாயி படத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயியின் வாழ்வியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மிகச் சிறந்த திரைப்படம். ஆனால், இப்படத்திற்கு போதிய தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை. அதோடு மக்களும் இப்படத்தைப் பார்க்க வரவில்லை. கடைசி விவசாயி படத்தை ஓடிடி அல்லது பதிவிறக்கம் செய்து பார்த்த அனைவரும் சொன்னது என்ன தெரியுமா? இந்தப் படத்தை நான் எப்படித் தவற விட்டேன் என்பது தான்.

அந்த அளவிற்கு மிகவும் எதார்த்தமான கதைக்களத்துடன், அழுத்தமாக சொல்ல நினைத்ததை சொல்லி விட்டார் இயக்குநர் எம்.மணிகண்டன். இவர் மட்டுமின்றி தங்கர் பச்சான், இரா.சரவணன் மற்றும் பி.எஸ்.வினோத்ராஜ் போன்ற சில இயக்குநர்கள் கதைக்களத்தில் சமரசம் செய்யாமல் இருப்பதால் தான், தமிழ் சினிமாவில் இன்றும் நல்ல திரைப்படங்களைக் காண முடிகிறது.

இதையும் படியுங்கள்:
சிறு பட்ஜெட் படங்களைக் காப்பாற்றுமா ஓடிடி பிளஸ்?
Good Films

பெரிய நடிகர்கள் மாஸ் படங்களில் மட்டும் நடிக்காமல், எதார்த்தமான திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என தங்கர் பச்சான் ஒருமுறை தெரிவித்திருந்தார். இது முற்றிலும் சரிதான். தற்போதைய சூழலில் பெரிய நடிகர்களின் படங்களில் சண்டைக் காட்சிகளும், பறப்பதும், மிதப்பதுமாக நம்ப முடியாத சூப்பர் ஹீரோக்கள் காட்சிகள் தான் அதிகளவில் இடம் பெறுகின்றன. ரசிகர்களால் நம்பத் தகுந்த காட்சிகளுக்கு மதிப்பளித்து எதார்த்தமான படங்களில் நடிக்க அனைத்து நடிகர், நடிகைகளும் முன்வர வேண்டும். அதோடு ரசிகர்களும் எதார்த்தமான படங்களை ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த சில ஆண்டுகளில் நிச்சயமாக எதார்த்தமான திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.

'ஒரு நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்' என்பார்கள். அதுபோல் ஒரு நல்ல திரைப்படமும் நல்ல நண்பனாக, நல்லவற்றைச் சொல்பவையாக இருக்க வேண்டும். இயக்குநர்களும், நடிகர்களும் மாறினால் நிச்சயமாக ரசிகர்களும் மாறுவார்கள்; மக்களின் ரசனையும் மாறும்; நல்ல திரைப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com