** இப்ப 'மன்னத்' பங்களா யாரோட பங்களாங்க....?
பாலிவுட் முன்னணி நடிகரும், தயாரிப்பாளருமான ஷாருக்கானின் இப்போதைய பங்களாவின் பெயர்தான் 'மன்னத்'.
** அப்ப.... ஃப்ளாஷ்பேக் ...??
18ஆம் நூற்றாண்டில், இந்திய மன்னர் ராஜா பிஜய்சென் தன்னுடைய மனைவிக்காக கட்டிய பங்களா 'மன்னத்'. இவர் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டு, அதுபோல ஒன்றை தனது காதல் மனைவிக்கு கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 'மன்னத்' பங்களாவைக் கட்டினார்.
1902- இல் ராஜா திடீர் மரணமடைய, 1915 -இல் பெரின் மானெக்ஜி பாட்லிவாலா, 'மன்னத்தை' வாங்கி, 'வில்லா வியன்னா' எனப் பெயரிட்டு, குர்ஷிபாய் என்பவரிடம் விற்றார். பின்னர் இது இரண்டு - மூன்று பேர்களிடம் கைமாறியது.
இப்பங்களாவை வாங்க நடிகர் சல்மான்கான் முற்படுகையில், அவரது தந்தை தடுத்து விட்டார்.
** இனிமேல்தான் சுவாரசியமான விஷயம். அது என்ன..??
1997 ஆம் ஆண்டு, ஷாருக்கான் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கையில், பாடல் காட்சி ஒன்று 'மன்னத்' பங்களாவில் படமாக்கப் பட்டது. 'மன்னத்' பிடித்து போனதால், அதை எப்பாடு பட்டாவது வாங்கவேண்டுமென ஷாருக்கான் நினைத்தார். மனதிற்குள் சபதமே எடுத்தார் என்று கூட சொல்லலாம்.
2001 - இல், ரூபாய் 13 கோடிக்கு 'மன்னத்' ஐ வாங்கினார்.
அதுவும் எப்படி.....??
அவர் கையில் பணமில்லாத காரணம், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரிடம் சென்று, அவருடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். தயாரிப்பாளரிடமிருந்து, பணத்தை முன்கூட்டியே பெற்று 'மன்னத்' பங்களாவை வாங்கினார்.
மிகவும் மோசமான நிலையில் இருந்த 'மன்னத்'ஐ மனைவி கவுரிகான் துணையுடன் புதுப்பித்தார். 6 மாடிகள், நீச்சல் குளம், ஜிம், கார்டன் என பல வசதிகள் உள்ளன.
மும்பையில் கடற்கரை ஓரமிருக்கும் 'மன்னத்தைக்' காண ஏராளமானவர்கள் வருகின்றனர். 'மன்னத்' பங்களாவின் கேட்டுக்கு வெளியே 24 மணி நேரமும், ரசிகர்கள் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதும், ஸெல்பி எடுத்துக்கொள்வதுமாக இருப்பார்கள்.
ரசிகர்களைக் காணவென்றே, பிரத்தியேக பால்கனி ஒன்று 'மன்னத்தில்' கட்டப்பட்டுள்ளது. தனது பிறந்த நாளன்று, இந்த பால்கனியிலிருந்து, ஷாருக்கான் தனது ரசிகர்களைக் காண்பது வழக்கம்.
புராதனச் சின்னமாக கருதப்படும் 'மன்னத்' பங்களாவில் ஏதேனும் மாற்றங்கள் செய்வதாக இருந்தால், மும்பை நகராட்சி அநுமதி தேவை.
'மன்னத்'தின் இன்றைய மதிப்பு 200 கோடி ரூபாயெனக் கூறப்படுகிறது.
மும்பையில், ஒரு சுற்றுலாத் தலமாக 'மன்னத்' பங்களா திகழ்கிறது!