Hit List movie review in tamil
Hit List movie review in tamil

விமர்சனம்: ஹிட் லிஸ்ட் - ஹிட் லிஸ்டில் இணையுமா?

ரேட்டிங்(3.5 / 5)

" நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி ,“ "ஆயிரம் ஆயிரம் காலம்," "என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா" போன்ற நல்ல நம்பிக்கை தரும் காதல் பாடல்களை தான் இயக்கும் படங்களில் இடம் பெற செய்து காதலின் நம்பிக்கை, குடும்ப உறவுகளின் மதிப்பீடுகள் என பாசிட்டிவான சிந்தனைகளை தன் படத்தில் சொன்னவர் இயக்குநர் விக்கிரமன். பூ வே உனக்காக, சூரிய வம்சம், வானத்தைப் போல படங்கள் இன்னமும் ரசிகர்களால் தொலைக்காட்சியில் விரும்பி பார்க்கப்படுகிறது .1990களில் வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்த விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவை தற்போது ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

பொதுவாகத் தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகம் ஆகும் போது அப்பாக்களே படத்தை இயக்குவார்கள். அல்லது வேறு இளம் இயக்குநர்கள் தன் மகனுக்காகக் கதை சொல்ல வந்தால் இந்த அப்பா இயக்குநர்கள் தேவையில்லாமல் கதையில் தலையிட்டு தன் மகனுக்கு நல்ல படம் கிடைக்காமல் செய்து விடுவார்கள். இயக்குநர் அப்பாவால் சினிமாவில் எதிர் காலத்தைத் தொலைத்த மகன்கள் பலர் இந்த கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற அபத்தங்கள் எதையும் விக்கிரமன் செய்யாமல் தன் மகன் விஜய் கனிஷ்காவை, ஹிட் லிஸ்ட் படத்தில் சூரிய கதிர், கார்த்திகேயன் என்ற இளம் இயக்குநர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். இந்த படத்தை ஆரம்ப நாட்களில் விக்கிரமனிடம் உதவியாளராக கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார். தன் குரு விக்ரமனுக்குச் செய்யும் கடமையாகவும், மரியாதையாகவும் இந்த படத் தயாரிப்பைப் பார்ப்பதாகச் சொல்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமார் தயாரித்துள்ள இந்த ஹிட் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள், கதை என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.

Hit List
Hit List

தான் உண்டு, தன் வேலை உண்டு என அமைதியான வாழ்க்கையை நகர்த்துபவர் நம் ஹீரோ. ஒரு உயிருக்குக் கூட தீங்கு செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் சைவ உணவு மட்டுமே உண்டு வருகிறார். 'விதி யாரை விட்டது' என்பது போல இந்த நல்ல மனிதனுக்கும் மாஸ்க் (முகமூடி) அணிந்த ஒருவனால் பிரச்சனை வருகிறது. மாஸ்க் மேன் நம்ம ஹீரோவை மிரட்டி சில நபர்களின் பட்டியலை அனுப்பி பட்டியலில் இருப்பவர்களை கொலை செய்யச் சொல்கிறார். செய்யாத பட்சத்தில் குடும்பத்தை காலி செய்து விடுவதாக மிரட்டுகிறார்.

இதையும் படியுங்கள்:
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக இந்த நடிகையா? அப்போ ஹிட்தான்!
Hit List movie review in tamil

வேறு வழியில்லாத நம்ம ஹீரோவும் பட்டியலில் இருப்பவர்களைக் கொலை செய்ய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் காவல் துறையின் சந்தேக பார்வை ஹீரோ மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ், மற்றொரு பக்கம் மாஸ்க் மனிதன் செய்யும் டார்ஜர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார் ஹீரோ. இந்த முகமூடி மனிதனின் முகம் தெரிந்ததா என்பதும், கொலைக்கான காரணங்களுமே படத்தின் கதைக்களம். முகம் தெரியாமல் மிரட்டும் கதைகள் பல தமிழிலும், ஹாலிவுட்டிலும் வந்துள்ளது. இதை அப்படியே பார்த்து காப்பி அடிக்காமல் தமிழுக்காக நிறையவே மாற்றி, சிந்தித்து ஹிட்லிஸ்டை தந்துள்ள சூரிய கதிர் மற்றும், கார்த்திகேயனைப் பாராட்டலாம்.

படத்தின் முதல் பாதி மாறுபட்ட திருப்பங்களுடன் சீட் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது. ஆனால் இரண்டாம் பாதியின் திரைக்கதை இதைத் தக்க வைக்கத் தவற விடுகிறது என்றே சொல்லலாம். முகமூடி மனிதன் யார் என முன்பே ஊகிக்க முடிந்ததும் சிறு குறையே. இந்த குறை அனைத்துமே மறக்கும்படி உள்ளது சரத் குமாரின் நடிப்பு. விசாரணை போலீஸ் அதிகாரியாகக் கண்களால் மிரட்டி விட்டார் சரத். அம்மாவாக நடிக்கும் சித்தாராவின் நடிப்பு இப்போது அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுக்குப் போட்டியாக உருவாகி வருகிறார் சித்தாரா என உறுதியாகச் சொல்லலாம். விஜய் கனிஷ்காவின் நடிப்பு முதல் படம் என்று சொல்ல முடியாத அளவில் உள்ளது. குறிப்பாக கெளதம் மேனனுடன் விஜய் நடிக்கும் காட்சிகள் கெளதம்க்கே டப் கொடுக்கிறார் தம்பி என்று சொல்லும் அளவில் உள்ளது.

GVM and Kanishka
GVM and Kanishka

கிங்ஸ்லியும் பால சரவணனும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள். "ஏன் இந்த பெண்ணுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்க வில்லை? என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு சுருதி வெங்கட்டின் நடிப்பு உள்ளது. கிளைமாக்ஸ் இன்னும் ட்விஸ்ட்டை கூட்டி இருந்தால் கே.எஸ்.ரவிக்குமார் தந்த இந்த குரு தட்சணை இன்னும் பிரகாசமாக இருந்திருக்கும். ஒரு புது முயற்சியைப் பாராட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஹிட்லிஸ்டை பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com