Hot Spot Movie Review in tamil
Hot Spot Movie Review in tamil

விமர்சனம்: நான்கு குறும்படங்களின் தொகுப்பு 'ஹாட் ஸ்பாட்'!

ரேடிங்(3 / 5)

இன்றைய மாறி வரும் பொருளாதார சூழல் ஆண் பெண் நட்பு, காதல், பெண்ணீயம் போன்ற பல விஷயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் நன்மை, தீமை இரண்டும் கலந்ததாக உள்ளது. இந்த இரண்டு பக்கங்களையும் சொல்லும் படமாக வந்துள்ளது, ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம். நான்கு தனித்தனி கதைகளாக இப்படம் வந்துள்ளது. விக்னேஷ் கார்த்தி இப்படத்தை இயக்கி உள்ளார்.

ஒரு சினிமா தயாரிப்பாளரிடம் ஒரு உதவி இயக்குநர் கதை சொல்வது போல படம் தொடங்குகிறது. பெரியார், அம்பேத்கர் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஒரு இளைஞன் தனது வருங்கால மனைவியின் வீட்டாரிடம் ஒரு கண்டிஷன் போடுகிறான். திருமணம் செய்து கொண்டு மனைவி வீட்டுக்கு தான் நிரந்தரமாக செல்லப்போவதாகவும், ஆண், பெண் இருவரும் சமம் என்கிறான். இது முதல் கதை.

ஒரு ஆணும் பெண்ணும் தீவிரமாகக் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்யும்போது உறவு முறையில் இருவரும் அண்ணன், தங்கை முறை வேண்டும் என்று தெரிய வருகிறது. இந்த இருவரும் என்ன முடிவு எடுத்தார்கள் என்பது இரண்டாவது கதை.

தனது அருவெறுப்பான செயல்களால் வேலை இழக்கும் ஒரு இளைஞன், தனது உடலை வைத்து தவறான வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறான். இது ஒருகட்டத்தில் இந்த இளைஞனின் காதலிக்கு தெரிய வருகிறது. இதன் பிறகு நடப்பது மூன்றாவது கதை.

Hot Spot Movie Review in tamil
Hot Spot Movie Review in tamil

வறுமை நிலையில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவர் தனது மகளை ஒரு பிரபல தொலைக்காட்சி போட்டியில் பங்கேற்க வைக்கிறார். அப்பெண் மர்மமான முறையில் இறந்து போகிறார். இதற்குக் காரணம் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம்தான் என்று குற்றம் சுமத்துகிறார் அப்பெண்ணின் தந்தை. இது நான்காவது கதை.

பெண்ணுரிமை என்ற பெயரில் ஆண் தாலி கட்டிக்கொள்வது, பெண்ணைப் போன்று ஆண் வீட்டில் நடந்து கொள்வது என அபத்தங்களின் தொகுப்பாக முதல் கதை உள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது கதைகள் இப்படியெல்லாம் நம் சமூகத்தில் நடக்கிறதா என்ற பதைபதைப்பை நமக்குள் ஏற்படுத்துகிறது.

நான்காவது கதை, தொலைக்காட்சியில் வரும் கேம் ஷோக்கள் குழந்தைகள் மீது மனதளவில் எவ்வளவு பெரிய வன்முறையை திணிக்கின்றன என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. இந்த நான்காவது கதை மட்டுமே, மனதிற்கு மிக நெருக்கமாகவும் நாம் பெற வேண்டிய விழிப்புணர்வு பற்றியும் பேசுகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: குழந்தையின்மை பிரச்னையை சொல்லும் 'வெப்பம் குளிர் மழை'!
Hot Spot Movie Review in tamil

இந்த நான்கு கதைகளும் எந்த புள்ளியிலும், சந்திப்பிலும் சந்திக்கவில்லை. நான்கும் நான்கு தனித்தனி கதைகளாக இருப்பதால் ஒரு முழு நீள திரைப்படம் பார்த்த உணர்விற்கு பதிலாக நான்கு குறும்படங்கள் பார்த்த உணர்வுதான் வருகிறது. இருப்பினும் ஓரளவு சுவாரசியம் இருக்கிறது.

ஒளிப்பதிவும் இசையும் ஓகே ரகம்தான். அந்தந்த கதைகளில் நடிப்பவர்கள் சரியாகப் பொருந்திபோய் விடுகிறார்கள். முதல் கதையில் வரும் ஆதித்யா பாஸ்கர், நான்காவது கதையில் வரும் கலையரசனும் மிக சிறப்பாகவே நடித்துள்ளார்கள். கலையரசன் கதறி அழும் காட்சியில் நம் வீட்டு குழந்தை பாதிக்கப்பட்டது போல உணர்வு வந்து விடுகிறது. அம்மு அபிராமியும், சாண்டி மாஸ்டரும் ஒரு சிறந்த காதல் உணர்வை கடத்துகிறார்கள். கலையரசனின் மனைவியாக வருபவர் நல்ல நடிப்பை தந்துள்ளார்.

இந்தப் படத்தில் சில குறைகள் உள்ளன. இருப்பினும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நிதானமாகப் பார்க்க, ‘ஹாட் ஸ்பாட்’ உதவி செய்கிறது. ‘குழந்தைகள் உலகம் தனி. இவர்களை மீடியாக்களின் வியாபாரப் பொருளாக பார்க்காதீர்கள்’ என்ற அறிவுரையை சத்தமாக சொல்கிறது இந்த ஹாட் ஸ்பாட்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com