ஜென்டில்மேனை தவறவிட்ட கமல்! இந்தியனில் சாதித்தது எப்படி?

Kamal Hassan - Indian
Indian Movie
Published on

தமிழ் சினிமாவில் ஊழலை மையமாக வைத்து படம் எடுக்கக் கூடியவர் இயக்குநர் சங்கர். தனக்கே உரித்தான பாணியில் பிரம்மாண்டமாக படம் எடுக்கும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். இவரது முதல் படமான ஜென்டில்மேன் தொடங்கி இந்தியன் 2 வரை பிரம்மாண்டத்தைத் திரையில் நேர்த்தியாக காண்பித்திருப்பார். கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கிய வெற்றித் திரைப்படம் இந்தியன். உலக அளவில் மிகப்பெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது‌ இத்திரைப்படம். இப்படத்தில் கமல் நடிக்க காரணமே சங்கர் இயக்கிய முதல் படம் தான் என்பது பலரும் அறியாத உண்மை.

இயக்குநர் சங்கர் முதன்முதலில் ஊழலை எதிர்க்கும் விதமான ஒரு கதையுடன், நடிகர் கமலைச் சந்தித்தார். ஆனால் அறிமுக இயக்குநர் இவ்வளவு பெரிய கதையை எப்படிக் கையாள்வார் என்ற சந்தேகம் கமலுக்கு எழுந்தது. இதனால் அப்படத்தை நிராகரித்து விட்டார் கமல். அடுத்ததாக சில நடிகர்களைத் தேடிச்சென்றும் சங்கருக்கு பலன் கிடைக்கவில்லை. பிறகு ஆக்ஷன் கிங் அர்ஜூன் அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவே படத்தின் வேலைகளைத் தொடங்கினார் சங்கர்.

சுமாரான படங்களையே கொடுத்து வந்த அர்ஜூனுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அதே நேரத்தில் முதல் படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற தாகம் சங்கருக்கு இருந்தது. அர்ஜூனின் வேட்கையும், சங்கரின் தாகமும் இணைந்து 1993 இல் உருவான படம் தான் ஜென்டில்மேன். எதிர்பார்த்ததை விடவும் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஊழலுக்கு எதிரான சங்கரின் போராட்டமும் முதல் படத்திலேயே வெற்றியடைந்தது.

அப்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களுக்கு மட்டுமே கட் அவுட் வைக்கும் சில இடங்கள் இருந்தன. ஒருமுறை கமல் அவ்வழியே வருகையில் ஜென்டில்மேன் படத்திறாகாக அர்ஜூனுக்கு மிகப்பெரிய கட் அவுட் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து மிரண்டு போனார். அடடா இந்தப் படத்தையா தவற விட்டோம் என தன்னையே நொந்து கொண்டாராம் கமல்.

அதற்குப்பின் இயக்குநர் சங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினியை மனதில் வைத்து மீண்டும் ஒரு ஊழல் சம்பந்தப்பட்ட கதையை எழுதினார். இந்த கதைக்கு ‘பெரிய மனுஷன்’ என்று தலைப்பும் வைத்திருந்தார். ஆனால் இப்படத்தில் ரஜினி நடிக்க முடியாமல் போகவே கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

அப்போது மீண்டும் கமலைச் சந்தித்து கதையைச் சொன்னார் சங்கர். முதல்முறை தான் தவற விட்டேன்; இம்முறை நிச்சயமாக தவற விடமாட்டேன் என படத்தில் நடிக்க கமல் ஒப்புக் கொண்டார். கதாநாயகனும் மாறியதால் படத்தின் பெயரும் 'இந்தியன்' என மாற்றப்பட்டது.

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட் வெற்றியைப் பதிவு செய்தது. தமிழ் சினிமாவில் முதல்முறையாக ரூ.50 கோடி வசூலைக் கடந்தது மட்டுமின்றி, ரஜினியின் பாட்ஷா பட வசூலையும் முறியடித்தது. பிறகு இப்படம் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தமிழிலேயே வெளியிடப்பட்டது. அங்கும் 100 நாட்களைக் கடந்து மெகா ஹிட் அடித்தது இந்தியன் திரைப்படம்.

இதையும் படியுங்கள்:
பெரிய ஹிட் படங்களைத் தெரிந்தே தவறவிட்டேன்: பிரபல நடிகர் உருக்கம்!
Kamal Hassan - Indian

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com