
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் படத்தின் கதைத் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தியவர்களே! இருப்பினும் ஒருசில கதாநாயகர்கள் சில கதைகளை ஒதுக்கி விடுவார்கள். அந்தப் படம் வேறொரு நடிகர் நடித்து சூப்பர் ஹிட் ஆகி விட்டால், அட்டா இந்தப் படத்தை எப்படி தவற விட்டோம் என்று வருந்துவார்கள். இது பொதுவாக அனைத்து நடிகர்களுக்கும் நடப்பவை தான். ஆனால், ஹிட் ஆகும் எனத் தெரிந்தே பட வாய்ப்பை நிராகரித்த ஹீரோ யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு கதையை எழுதி, நடிகர்களைத் தேர்வு செய்து, ஷூட்டிங்கை முடித்து திரைக்கு கொண்டு வருவதற்குள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில் முதல் பிரச்சினையே நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு தான். பொதுவாக இயக்குநர்களுக்கு கதை எழுதும் போதே, எந்த நடிகர் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்பது தெரிந்து விடும். அப்படி இயக்குநர் மனதில் இருக்கும் நடிகர், கதையை நிராகரித்தால் அடுத்த நடிகரிடம் இந்தக் கதை செல்லும்.
இயக்குநர் சங்கர் தனது முதல் படமான ஜென்டில்மேனில் கமல்ஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணியிருக்கிறார். ஆனால், புதுமுக இயக்குநர் என்ற ஒரே காரணத்தால் அப்படத்தை நிராகரித்து விட்டார் கமல். ஆனால் அர்ஜூன் நடிப்பில் ஜென்டில்மேன் படம் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றதும், கமல்ஹாசன் தன்னையே நொந்து கொண்டாராம்.
இதுபோன்ற பல உதாரணங்களை தமிழ் சினிமாவில் கூறலாம். இருப்பினும் ஒருபடம் நிச்சயமாக வெற்றியைப் பெறும் என்று தெரிந்தே அப்படத்தின் வாய்ப்பை நிராகரிக்கத் தனி தைரியமே வேண்டும். தைரியம் இருந்தாலும், வெற்றிப் படங்களை நிராகரிப்பதன் மூலம் அந்த ஹீரோவின் சினிமா வாழ்க்கை பாதியிலேயே நின்று போய்விடும் அல்லவா! இந்தத் தவற்றைச் செய்து தற்போது போதிய சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தள்ளாடுபவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த்.
தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீகாந்த், ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பூ, பம்பரக்கண்ணாலே மற்றும் நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த ஸ்ரீகாந்த், தற்போது படவாய்ப்பின்றி தவித்து வருகிறார். இந்நிலையில், தான் தவறவிட்ட படங்கள் என்னென்ன என்பதை சமீபத்தில் உருக்கமாக தெரிவித்திருந்தார்.
அதில், “நான் சில படங்களை சூழ்நிலை காரணமாக தவற விட்டுள்ளேன். டிஸ்யூம், ரன், நான் கடவுள், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி மற்றும் பிச்சைக்காரன் என நான் தவறவிட்ட படங்கள் ஏராளம். இவையனைத்தும் நிச்சயமாக வெற்றி பெறும் என்று கதையைக் கேட்டவுடனேயே நான் தெரிந்து கொண்டேன். ஆனால், சூழ்நிலை சரிய்க அமையாததால் இந்தப் படங்களைத் தவற விட்டேன்” என உருக்கமாக கூறினார் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் சொன்ன அனைத்துப் படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்ற படங்கள். ஒருவேளை இவர் இந்தப் படங்களில் நடித்திருந்தால், இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருப்பார் என்பதில் ஐயமில்லை.