ஒருகாலத்தில் அமிதாப் பச்சனின் வாழ்க்கையில் கடனால் என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து ஒருமுறை பேசியிருக்கிறார். இதனை முழுமையாகப் பார்ப்போம்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 'பிக் பீ' மற்றும் 'ஷாஹேந்ஷா' என்ற செல்லப் பெயர்களால் அழைக்கப் படுகிறார். இவர் 1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில் 'கோபக்கார இளைஞன்' எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். அவர் பல தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.
இப்போது கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்திருந்தாலும், ஒருகாலத்தில் அவரும் கடன் தொல்லையால் அவதிப்பட்டிருக்கிறார். ஆம்! ஒருமுறை அமிதாப் பச்சன் தொடர்ந்து படங்களை தயாரித்து எந்த லாபமும் பெறாமல் கடன் தொல்லைக்கு ஆளானார். சுமார் 90 கோடி கடன் கொடுக்க வேண்டியிருந்தது.
ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், “எனது 44 வருட சினிமா வாழ்க்கையில் நான் நிதி நெறுக்கடியில் சிக்கி இருந்த காலம் தான் மிகவும் இருண்டகாலமாகும். கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டிற்கு வந்து மிரட்டுவார்கள். கடுமையான வார்த்தைகளால் திட்டினர். எனது வீட்டை கூட பிடுங்க முயன்றனர். டிரைவருக்கு சம்பளம் கொடுக்கக்கூட என்னிடம் பணம் இல்லை. இதனால் ஒரு முறை யாஷ் சோப்ரா வீட்டிற்கு முகத்தை மூடும் வகையில் தொப்பி அணிந்து கொண்டு நடந்தே சென்றேன்.
யாஷ் சோப்ரா ஒரு வெற்று காசோலையை கொடுத்து எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால், நான் நிதியுதவி வேண்டாம், எதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினேன். அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை பெற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்தேன். உடனே மொஹாபதியன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு கோன் பனேகா குரோர்பதி கைகொடுத்தது.'' என்று கூறியிருந்தார்.
என்னத்தான் ஒரு காலத்தில் பெரிய பணக்காரர்களாக நாம் மாறினாலும், வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலை ஒரு முறை வரத்தான் செய்யும். அப்போது நாம் அதை எப்படி கையாள்கிறோம் என்பதும், நல்ல வழியில் கையாள்கிறோமா? என்பதும்தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.