
குங்குமப்பூ உலகின் மிகவும் விலை உயர்ந்த மசாலா பொருளாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் அதன் சாகுபடி, அறுவடை மற்றும் உற்பத்திக்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. மேலும் பல சவாலான காரணிகளும் அடங்கும். அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குங்குமப்பூவின் பயன்கள்;
குங்குமப்பூவை காய்ச்சிய பாலில் கலந்து கர்ப்பிணிப் பெண்கள் அருந்துவார்கள். மேலும் குங்குமப்பூ ஒரு மசாலா பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. ஆனால் அதனுடைய விலை சாமானியர்களுக்கு எட்டாததாக மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது.
குறைந்த மகசூல்;
ஒவ்வொரு குங்குமப்பூ குரோக்கஸ் செடியும் மிகக் குறைந்த அளவு குங்குமப்பூவையே தருகிறது. ஒரு சிறிய அளவிலான மசாலாவை உற்பத்தி செய்யக்கூட ஆயிரக்கணக்கான பூக்கள் தேவைப்படுகின்றன. இதனால் இது மிகவும் அரிதானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் உள்ளது.
மென்மையான சூலகங்கள்;
ஒவ்வொரு குங்குமப்பூவும் மூன்று சிவப்பு சூலகங்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது. ஒரு பவுண்டு குங்குமப் பூவை உற்பத்தி செய்ய தோராயமாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் பூக்கள் தேவைப்படுகின்றன. குங்குமப்பூக்களை அறுவடை செய்ய இயந்திரங்களை பயன்படுத்த முடியாது. முற்றிலும் மனிதர்கள் தான் அறுவடை செய்ய முடியும் மென்மையான சூலகங்களை பாதுகாக்க அதிகாலையில் பூக்களை பறிக்க வேண்டும் பின்னர் அவை கையால் கவனமாக பிரிக்கப்படுகின்றன.
குறுகிய பூக்கும் காலம்;
குங்குமப்பூக்கள் ஒவ்வொரு வருடமும் இலையுதிர் காலத்தில், ஒன்றிலிருந்து மூன்று வாரம் மட்டுமே பூக்கும். அறுவடை செய்வதற்கான இந்த வரையறுக்கப்பட்ட நேரம் அதன் பற்றாக்குறையையும் அதற்கான செலவையும் அதிகரிக்கிறது.சமையல் பயன்பாடுகள், பாரம்பரிய மருத்துவம் மற்றும் அழகு சாதன பொருட்களில் குங்குமப்பூவிற்கான அதிக உலகளாவிய தேவை, குறைந்த அளவிலான விநியோகம் காரணமாக அதன் விலையை அதிகரிக்கிறது.
குறிப்பிட்ட வளரும் கால நிலைகள்;
குங்கும பூக்கள் எல்லா காலநிலையிலும் செழித்து வளராது. அவை துல்லியமான சுற்றுச்சூழல் இருந்தால்தான் நன்கு வளரும். நன்கு வடிகால் வசதி உள்ள மண், குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அளவான சூரிய ஒளி போன்றவை இதற்கு தேவை. பாதகமான வானிலை அல்லது காலநிலை மாற்றம் இந்த பூக்களின் உற்பத்தியை கணிசமாக பாதிக்கும்.
ஒழுங்கற்ற மழைப்பொழிவு, வறட்சி மற்றும் வெப்ப நிலை ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட ஒழுங்கற்ற வானிலை முறைகள் குங்குமப்பூ பூப்பதையும் விளைச்சலையும் கணிசமாக பாதிக்கின்றன .மழை பெய்யும் போது பூக்கள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டு அழுகிப் போகின்றன.
புவியியல் செறிவு;
உலகின் குங்குமப் பூவில் சுமார் 90% ஈரான் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் காஷ்மீரிலும் ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து குங்குமப்பூ பெறப்படுகிறது.
கலாச்சார மதிப்பு;
குங்குமப்பூ அதன் தனித்துவமான சுவை, நறுமணம், நிறம் மற்றும் மருத்துவ குணங்களுக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதிக்கப்படுகிறது. மன்னர்களின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாசனை திரவியங்கள் மற்றும் உணவு வகைகளில் குங்குமப்பூ பயன் படுத்தப்பட்டது. அது ஒரு ஆடம்பரப் பொருளாகவும் அந்தஸ்தை உயர்த்தும் நோக்கிலும் பயன்படுத்தப்பட்டது.
நோய்களும் பூச்சித்தாக்குதலும்;
குங்குமப் பூவின் தண்டுக்கிழங்குகள் பூஞ்சைத் தொற்று மற்றும் பூச்சித் தொல்லைகளுக்கு ஆளாகின்றன. இதனால் பாரம்பரிய விவசாய முறைகளில் பூச்சி மேலாண்மை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.
பொருளாதார சவால்கள்;
ஆப்பிள் அல்லது வால்நட் போன்ற பிற பயிர்களுடன் ஒப்பிடும்போது குங்குமப்பூ சாகுபடியிலிருந்து குறைந்த லாபம் கிடைப்பதால் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நகரமயமாக்கல் குங்குமப்பூ சாகுபடிக்கான பரப்பளவையும் குறைத்துள்ளது. மேலும் நடவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் தரமற்ற கிழங்குகள் குறைந்த மகசூலுக்கே வழி வகுக்கின்றன.