
சினிமாவில் ஹீரோக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வில்லன்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. ரசிகர்கள் மத்தியிலும் இதுபோன்ற பழக்கம் தான் இருந்து வருகிறது. இருப்பினும் வில்லன்களால் தான், படத்தில் ஹீரோவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் நடிகர்களை எடுத்துப் பார்த்தால், நிச்சியம் அதில் ரகுவரனின் பெயர் இருக்கும். மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பார் ரகுவரன். இருப்பினும் தான் ஒரு லக்கியான நடிகர் இல்லை என ஒருமுறை தெரிவித்திருந்தார்.
மிகச்சிறந்த வில்லன் நடிகரான ரகுவரன் ஏன் அப்படி சொன்னார் என்று தெரியுமா?
கேரளாவைச் சேர்ந்த நடிகர் ரகுவரன், 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தடம் பதித்தார். கதாநாயகன், குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் என பல வேடங்களில் நடித்த ரகுவரனுக்கு, வில்லன் அவதாரம் தான் பெரும் புகழை ஈட்டித் தந்தது. ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரகுவரனின் கதாபாத்திரம், இன்றளவும் பேசப்படுகிறது.
சம்சாரம் அது மின்சாரம், முதல்வன், பாட்ஷா, முகவரி, ரட்சகன், மனிதன், அஞ்சலி மற்றும் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் ரகுவரன். இவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது; அதேபோல் இவருடைய குரலும் தனித்துவமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர். இருப்பினும் தான் ஒரு லக்கியான நடிகர் இல்லை என்பதை இறப்பதற்கு முன்பு ஒருமுறை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ரகுவரன் கூறுகையில், “சினிமாவில் அதிகமாக கஷ்டப்பட்டு உழைப்பேன். தொடக்கத்தில் நான் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் எனக்கு அதிர்ஷ்டமே இல்லை என்றெல்லாம் நினைத்து வருந்தி இருக்கிறேன். தொடர்ந்து உழைத்தன் பலனாக கிராமத்து மக்களுக்கு எல்லாம் ரகுவரன் என்றால் யாரென்று தெரியும் அளவிற்கு புகழ் பெற்றேன். அதன்பிறகு தொடர்ந்து ரஜினி படங்களில் வில்லனாக நடித்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தேன்.
உச்சத்தில் இருந்த நான், சிறிது நாட்களுக்கு பட வாய்ப்பு இல்லாமல், தனிமையில் தவித்த நேரத்தில் தான், மிகவும் உறைந்து விட்டது போன்ற உணர்வு தோன்றியது. அப்போது நினைக்க கூடாததை நினைத்தும், செய்யக் கூடாததை செய்தும் பல நாட்களை வீணடித்தேன். ஒரு சில மாதங்களுக்குப் பின், அதிலிருந்து மீண்டு வந்த பிறகு தான் வாழ்க்கை என்றால் என்னவென்றே புரிந்தது” என இறப்பதற்கு முன்பாக ஒரு பேட்டியில் ரகுவரன் தெரிவித்தார்.
கடைசியாக ரகுவரன் நடித்த யாரடி நீ மோகினி திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. சினிமாவில் தொடர்ந்து நீடிக்க உழைப்பு மட்டும் போதாது. கொஞ்சமாவது அதிர்ஷ்டமும் வேண்டும் என்பதை ரகுவரனின் வார்த்தைகளால் உணர முடிகிறது. இருப்பினும் ஹீரோ அளவுக்கு படத்தில் அதிகமாக உழைத்தும் வில்லன்களுக்கு மட்டும் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதில்லை. இருப்பினும், ஹீரோ மட்டுமல்ல நடிகர்கள் அனைவரது உழைப்பும் ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கியம்.