‘சார், நீங்க எங்கேயோ போய்ட்டீங்க என்று நினைக்க வேண்டாம்; நான் இங்குதான் உள்ளேன்:’ நடிகர் ஜனகராஜ்!

Actor Janakaraj
Actor Janakaraj

கைச்சுவை நடிகராக 80 - 90களில் தமிழ்ப் படங்களில் பட்டையை கிளப்பியவர் நடிகர் ஜனகராஜ். அபூர்வ சகோதரர்கள், அக்னி நட்சத்திரம், சிந்து பைரவி, விக்ரம் போன்ற படங்களில் இவர் நடித்த வேடங்கள் இன்றும் நம்மை சிரிக்க வைக்கும். பல வருடங்கள் சினிமாவில் வெகு பிசியாக நடித்து கொண்டிருந்த இவர், பிறகு நடிப்புத்துறையிலிருந்து விலகி, அமெரிக்காவில் செட்டில் ஆகி ஓய்வெடுக்கிறார் என்ற செய்தி சில வருடங்களுக்கு முன்பு வெளியாகியது. ‘இந்தச் செய்தி முழுவதும் பொய். நான் சென்னையில்தான் உள்ளேன்' என்று நடிகர் ஜனகராஜ் தற்போது தனியார் சேனல் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ‘தன்னைப்  பற்றிய தவறான செய்திகளை அவதூறாகப் பரப்புகின்றனர்’ என்று மீடியா துறையை சாடியுள்ளார் நடிகர்  ஜனகராஜ்.

இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக தனது திரை வாழ்வை தொடங்கிய ஜனகராஜ், ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின், ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் இவர் ஏற்ற வில்லன் வேடம் இவரை கவனிக்க வைத்தது. பாரதிராஜாவின் படங்களைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களிலிலும் வில்லன், காமெடி, குணச்சித்திரம் என வேடங்கள் இவரைத்  தேடி வர ஆரம்பித்தன. ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் மூத்த நடிகர் வி.கே .ராமசாமியுடன் ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்று இவர் அடித்த லூட்டி இன்றும் மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டு  பேச்சுலர் வாழ்க்கையை அனுபவிக்கும் கணவர்களின் ரோல் மாடலாக உள்ளது. சூப்பர் ஸ்டாருடன் இவர் நடித்த, ‘படிக்காதவன்’ படத்தில் இவர் பேசிய, ‘தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுபா’ என்ற வசனம் இன்றும் சிரிப்பலைகளைத் தோற்றுவிக்கிறது.

பல மறக்க முடியாத கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஜனகராஜ், ‘திரைத்துறையிலிருந்து விலகி, அமெரிக்காவில் தனது மகனுடன் வசிக்கிறார்’ என்ற செய்தி சில வருடங்களுக்கு முன் ஊடகங்களில் வெளியானது. இது உண்மை என்றே பலராலும் நம்பப்பட்டு வந்த நிலையில், இது முற்றிலும் தவறான செய்தி என்று கூறியுள்ளார் நடிகர் ஜனகராஜ். ஊடகங்கள் மனசாட்சி இன்றி நடந்து கொள்கின்றன என்றும் சமீபத்தில் இறந்த தனது சக நடிகர் சிவாஜி ராவ் இறுதி சடங்குகளை கூட காட்சி பொருளாக்கினார்கள் என்றும் ஊடகத்துறையின் மேல் தனது அதிருப்தியை இந்தப் பேட்டியில் இவர் வெளிப்படுத்தி உள்ளார். அமெரிக்கா விசா கூட இல்லாத தான் எவ்வாறு அமெரிக்க சென்றிருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி, ஆதாரம் இல்லாத செய்தி வெளியிடுவோரை கடுமையாக சாடியுள்ளார்.

‘விக்ரம்’ (1986) படத்தில் இவர் ஏற்ற துபாஷி (மொழிபெயர்ப்பாளர்) வேடம் இன்றளவும் எல்லோர் மனதிலும் நிற்கிறது. இவருடைய ஒரே மகன் சென்னையில் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளர் பணியை மேற்கொண்டுள்ளார் என்பது வினோதமான ஒற்றுமை. சென்னையில் பணிபுரியும் அவரது மகனைத்தான் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவருடன் ஜனகராஜ் செட்டில் ஆகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மிகவும் மெலிந்து தோற்றமளிக்கும் நடிகர் ஜனகராஜ், சில வருடங்களுக்கு முன்பு பருத்த தேகத்துடன் '96’ படத்தில் பள்ளி வாட்ச்மேன் வேடத்தில் நடித்தது நினைவிருக்கலாம். ‘ஆரோக்கியம் கருதி தினமும் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து இப்போது தெம்பாக உள்ளேன். மறுபடியும் சினிமாவில் வலம் வருவேன்’ என்று இவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com