கன்னடத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சிவராஜ்குமார் நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். இவர் மறைந்த முன்னாள் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட நடிகர் சிவராஜ்குமார் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் தான். அதற்கு காரணம் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் அவர் நடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவரின் நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று செல்லலாம். அதே போல கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயம் ஆனார். அவர் அடுத்து விஜய்யின் தளபதி69 படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் உடல்நிலை காரணமாக நடிக்கவில்லை என்று மறுத்து விட்டார்.
அடுத்தடுத்து படத்தில் பிஸியாக நடித்து வந்த சிவராஜ் குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால், அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்த செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் மிகந்த கவலை அடைந்தனர். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் நடிகர் சிவராஜ்குமாருக்கு சிறுநீா் பையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள கடந்த மாதம் கடைசி வாரம் அமெரிக்கா சென்றார்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி ஆஸ்பத்திரியில் 26-ந் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. புற்றுநோய் பாதித்த சிறுநீர்ப்பை அகற்றப்பட்டது. செயற்கை முறையில் ஏற்படுத்தப்பட்டு, சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சிவராஜ் குமார் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்து இருந்தார். இருப்பினும் சிவராஜ்குமாரின் ரசிகர்கள் அவரின் உடல் நலன் குறித்து தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த அறுவை சிகிச்சை நடைபெற்று ஒரு வாரத்திற்கு பிறகு அவர் குணம் அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் தனது மனைவி கீதாவுடன் உருக்கமாக பேசியுள்ள வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் பேசியுள்ளதாவது:-
"தற்போது நான் புற்றுநோயில் இருந்து மீண்டுவிட்டேன் என்று டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். இந்த கடுமையான நேரத்தில் என் மனைவி கீதா, எனக்கு பக்கபலமாக இருந்தாள். கீதா இல்லாமல் சிவண்ணா இல்லை. உங்கள் (ரசிகர்கள்) அனைவரின் பிரார்த்தனையால் நான் குணம் அடைந்துள்ளேன்.
அறுவை சிகிச்சைக்கு முன் நான் பயந்தேன். ஆனால், ரசிகர்களின் அன்பு எனக்கு தைரியத்தை கொடுத்தது. உங்களின் பிரார்த்தனை பலித்துள்ளது. அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். மேலும் ஜனவரி இறுதி வாரத்தில் இந்தியா திரும்பி விடுவேன். மார்ச் மாதத்திற்குப் பிறகு முழுமையாக பணிக்கு திரும்புவேன்"
என்று நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் முருகேசன் மனோகரன் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.