

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ராமாயணா , துரந்தர் , சர்வம் மாயா உள்ளிட்ட திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. இந்த தகவல் தென்னிந்திய மற்றும் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேன்ஸ், வெனிஸ், பெர்லின் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இணையான முக்கியத்துவத்தை இது பெற்றுள்ளது. உலக சினிமாக்களின் அம்சங்களை அறிந்து கொள்வதற்கு இந்தியர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
ஆசியாவின் மிகப் பழமையான திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேச திரைப்பட விழா 1952-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, கடந்த 22 வருடங்களாக கோவாவில் மட்டுமே நிரந்தரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விழா சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பால் (FIAPF) அங்கீகரிக்கப்பட்டது. தற்போது இதன் 57 வது பதிப்பு நடைபெற உள்ளது. இதில் 137 நாடுகளை சேர்ந்த 1,900-க்கும் அதிகமான திரைப்படங்கள் கலந்துக் கொள்ள விண்ணப்பித்திருந்தன.
விண்ணப்பிக்கப்பட்ட திரைப்படங்களில் , 86 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 திரைப்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படங்களில் சர்வதேச விருதுகளை வென்ற திரைப்படங்களும் , ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களும் அடங்குகின்றன . இந்த ஆண்டு இந்திய திரைப்பட விழாவின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள அஷுதோஷ் கவாரிகர் , இந்த விழா 'எல்லைகள் இல்லா கதைகள்' என்பதை மையமாகக் கொண்டது என்று அறிவித்துள்ளார்.
திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல , அது நாடுகளின் மொழி கலாச்சாரம் இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து மனிதர்களை ஒன்றிணைக்கும் பாலம் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டில் உருவான கதை , உலகின் வேறொரு எல்லையில் இருக்கும் ஒரு பார்வையாளர் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகளே , சினிமாவின் வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விழாவின் தொடக்கத் திரைப்படமாக போலந்து நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி இயக்கிய 'ஃபாதர்லேண்ட்' திரைப்படம் திரையிடப்படுகிறது. விழாவின் நடுப்பகுதியில் 'ஐ மேட்டர்' என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது. சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருளைக் கொண்ட இப்படம் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இறுதி நாளன்று 'வி ஆர் ஆல் ஸ்டிரேஞ்சர்ஸ்' என்ற திரைப்படத்துடன் இந்த திரைப்பட விழா நிறைவடைகிறது.
இந்த திரைப்பட விழாவில் பிரிக்ஸ் நாடுகளின் சார்பில் சில திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. இதில் தொடக்கத் திரைப்படமாக , சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றுள்ள 'ராமாயணா' திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இந்தியக் கலாச்சாரம் மற்றும் புராணக் கதைகளை நவீன தொழில்நுட்பத்துடன் சர்வதேசத் தரத்தில் உலகிற்கு காட்சிப்படுத்துவதற்கு திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் 'இந்தியன் பனோரமா' பிரிவில் ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்தப் பிரிவின் தொடக்கத் திரைப்படமாக மாபெரும் வெற்றிப் பெற்ற 'துரந்தர்' திரையிடப்படுகிறது. இறுதித் திரைப்படமாக 'பிகம்மிங்' திரையிடப்படவுள்ளது. மேலும் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வெற்றிப் பெற்ற 'சர்வம் மாயா' திரைப்படமும் இதே பிரிவில் திரையிடப்பட உள்ளது.
இந்த விழாவின் இறுதியில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறப்பு நடுவர் விருது எனப் பல்வேறு பிரிவுகளில் 'வெள்ளி மயில்' விருதுகள் வழங்க உள்ளனர். மேலும் உயரிய விருதான தங்கமயில் விருதுக்கு 15 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. அது மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிற்கு வாழ்நாள் முழுவதும் பங்களித்த கலைஞருக்கு 'சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட உள்ளது.