

கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து இயக்கி வரும் 'டோரதி’ திரைப்படத்திற்கு இளையராஜா தனது பழைய பாணியில் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களும் இசையும் 1980-களின் காலகட்டத்தை நினைவுபடுத்தும் வகையில், இளையராஜா இசையமைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திரைப்படம் இளையராஜாவின் இசை பயணத்தில் 1540 வது திரைப்படம் என்ற சிறப்பினை பெற்றுள்ளது.
இளையராஜாவின் இசையில் ஏற்கனவே வெளியான இந்த திரைப்படத்தின் ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்துள்ளன. இந்த திரைப்படம் 1980- களின் காலகட்டத்தில் நடைபெறும், இரு நண்பர்களையும் வாழ்க்கையில் நுழையும் காதலை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
புதுமையான கதைக்களம் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டதால் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்தின் பின்னணி இசை வெளியிட்டு நிகழ்ச்சி, சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளியாகும் முன்னரே, அதன் பின்னணி இசை தொகுப்பு முன்கூட்டியே வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் வசந்த், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், மற்றும் கார்த்திக் சுப்புராஜின் முந்தைய திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, தனது இசைக்கும் ரசிகர்களுக்கும் இடையிலான உறவை உணர்ச்சிகரமாக எடுத்துரைத்தார். ரசிகர்களின் வாழ்க்கையோடு தனது இசை பின்னிப் பிணைந்திருப்பதாகக் கூறிய அவர், தான் அதிகமாக பேசாமல் மௌனத்தை கடைப்பிடிப்பதற்கான காரணத்தையும் கூறினார்.
கே.பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற பெரிய இயக்குநர்களுடன் பணியாற்றிய பிறகு தன்னைப் போன்ற புதிய தலைமுறை இயக்குநருடன் பணிபுரியும் போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் , இளையராஜாவிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த இளையராஜா “என்னுடைய நோக்கமே புதிதாக வரும் இயக்குநர்களுக்கு தவறாமல் இசையமைத்து விட வேண்டும் என்பது தான். அவர்களிடம் தான் வெறும் பாத்திரம் இருக்கும் , அந்த பாத்திரத்தில் நிறைய திரவத்தை ஊற்றி வந்தால் , அதில் நான் என்ன ஊற்றுவது?அதனால் புதியவர்கள் வெறும் கதையோடு மட்டும் தான் வருவார்கள். என்னுடைய இசையைத் தான் அவர்கள் ரெஃபரன்ஸாக வைத்துக்கொள்கிறார்கள். என்னுடைய இசை தான் அவர்களுக்கு ஒரு இசையை தேர்ந்தெடுக்கும் முறையை கற்று கொடுத்தது.
இறைவன் இசையை என்னிடம் தந்துவிட்டதால் என் இசையை மீறி அவர்களால் யோசிக்க முடியாது" என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்த அவர் " விரல் நுனியில் அவர்கள் எல்லா இசையையும் அறிந்திருக்கலாம். ஆனால், என் இசை அது மாதிரி இருக்கிறதா? எல்லாரையும் டெஸ்ட் செய்யுங்கள். நான் கர்வத்தோடு சொல்கிறேன் என நினைக்காதீர்கள்? கர்வத்தோடு தான் சொல்கிறேன். ஏனென்றால் என் இசை போல் உலகத்தில் எதுவும் இல்லை. அது போல எங்கே இருக்கிறது? எடுத்து காட்டுங்கள்.
நான் பொட்டல் காட்டிலிருந்து கல்லும் முள்ளும் குத்தி வந்திருக்கிறேன். எனக்கு இசை என்றால் என்னவென்றே இன்னமும் தெரியாது. அதற்கு அடையாளம் தான் நான். அதனால், நான் இன்றும் இசை அமைத்து கொண்டிருக்கிறேன். இசை என்னவென்று தெரிந்திருந்தால்? இந்நேரம் நான் வீட்டில் நிம்மதியாக சோபாவில் அமைதியாக உட்கார்ந்திருப்பேன்” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.