கார்த்தி, அருள்நிதி, சூரி மோதும் சினிமா திருவிழா: ஒரே வாரத்தில் 9 திரைப்படங்கள் வெளியீடு!

சர்தார் 2, டிமாண்டி காலனி 3, மண்டாடி உட்பட செப்டம்பர் 10, 11 தேதிகளில் வெளியாகும் படங்களின் பட்டியல்!
Sardar 2 - Demonte Colony 3 - Mandaadi
Sardar 2 - Demonte Colony 3 - Mandaadi

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதால் கோடம்பாக்கத்தில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்த வாரம் செப்டம்பர் 10, 11 ஆகிய இரு தேதிகளில் 9 திரைப்படங்கள் வெளியாகின்றன. கார்த்தி, அருள்நிதி, சூரி நடிப்பில் வெளிவரும் 3 பெரிய பட்ஜெட் தமிழ்ப்படங்கள், 1 குறைந்த பட்ஜெட் தமிழ்ப்படம், மேலும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழ் டப்பிங்கில் வெளியாகும் 5 படங்கள் என மொத்தம் 9 படங்கள் வெளியாகின்றன.

வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்:

  1. சர்தார் 2

  2. டிமான்ட்டி காலனி 3

  3. மண்டாடி

  4. ரீ யூனியன்

  5. VK 30

  6. மகேந்திரகிரி வாராஹி

  7. வேம்பயர்ஸ் சகா

  8. ரணபாலி

  9. பிரதம த்ருஷ்டியா குற்றவாளி

1. சர்தார் 2 (தமிழ் - ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர்)

Sardar 2
Sardar 2

‘பருத்திவீரன்’ மெகா ஹிட்டுக்குப் பின் கார்த்திக்கு அமைந்த முக்கியமான ஆக்‌ஷன் படங்கள் ‘சிறுத்தை’ மற்றும் ‘சர்தார்’. சிறுத்தை படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பில்லை என இயக்குநர் சிவா அறிவித்துவிட்ட நிலையில், ‘சர்தார் 2’ தற்போது வெளியாகிறது.

முதல் பாகத்தில் நடித்த கார்த்தி, ரஜிஷா விஜயன் மீண்டும் நடிக்க, இவர்களுடன் புதிதாக எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இணைந்துள்ளனர். முதல் பாகத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அப்பா, மகன் என இரு வேடங்களில் கார்த்தி நடிக்கிறார். அப்பா கதாபாத்திரம் ‘ஸ்பை ஏஜெண்ட்’ (உளவுத்துறை அதிகாரி), மகன் கதாபாத்திரம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்.

கதைக்களம்: முதல் பாகத்தின் கிளைமேக்ஸில் சீன ஏஜென்ட்டை அழிப்பது போல் காட்டியிருப்பார்கள். இந்த இரண்டாம் பாகத்தில், இந்தியர்கள் உபயோகிக்கும் தண்ணீரை சீனா கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறது. அதைச் சீனாவுக்குச் சென்று நாயகன் ‘சர்தார்’ எவ்வாறு நிர்மூலமாக்குகிறார் என்பதே கதை.

வில்லனின் பெயர் ‘பிளாக் கேடர்’. சீனாவில் நிஞ்சா போன்ற ஒரு ஆயுதத்திற்குத் தான் ‘கேடர்’ என்று பெயர். அதைத் தன் பெயராக வில்லன் வைத்திருப்பதால் அவன் சீனாவின் கைக்கூலியாக இருக்கலாம்; ஆனால் தோற்றத்தில் அமெரிக்கரைப் போல் இருக்கிறான். வில்லனின் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதே கதையின் மையம்.

ரசித்த வசனங்கள்:

  1. "அப்பா பலசாலி, மூளைக்காரன். பையன் கூல் கை (Cool Guy), ஆனா டஃப் (Tough) ஆனவன். ஆனா ஷோ ஸ்டீலர் நான்தான்! ஏன்னா அவங்க டார்கெட்டே நான்தான்!"

  2. "டெக்னிக்கலி நான்தான் நல்லவன், அவங்கதான் கெட்டவங்க."

  3. "இப்போ கேள்வி என்னன்னா... ஜெயிக்கப்போவது நல்ல வில்லனா? கெட்ட வில்லனா?"

  4. "நம்ம தேசம் அபாயத்தில் இருக்கு. நமக்கு இம்மீடியட்டா ஒரு ஏஜெண்ட் வேணும்."

  5. "அந்தக் கூத்தாசிப் பையன் வர்றதுக்குள்ள தைப்பூசமே வந்துடும்! வரச்சொல்லு அவனை... போஸ் இப்போ வேல் தூக்கிட்டாரு, இப்போ எல்லாக் காவடிகளையும் வழிநடத்தும் லீடர் அவரு!"

  6. "- மெட்ராஸ்ல இருந்து ஆள் வந்திருக்கு, உடனே போகணும்.

    - இப்படிப் பாதையிலேயே காவடியை விட்டுட்டுப் போனா எப்படி?

    - நீங்கதானே சொல்லிக் கொடுத்தீங்க 'செய்யும் தொழிலே தெய்வம்'னு... நான் போயாகணும்!"

  7. "முப்பது கோடிப் பேர் சம்பந்தப்பட்ட விஷயம்... இந்த ட்ரெய்னை வெச்சு எப்படி முடிக்கப்போறோம்?"

  8. "- மிஷன் அக்கம்ப்ளிஷ்டு சக்சஸ்ஃபுல்லி!

    - இல்லை சார், எனக்குப் பெருசா தோத்துட்டு நிக்கிற மாதிரி தோணுது..."

  9. "போஸ், அத்தனை உயிர்களையும் நீதான் காப்பாத்தியிருக்கே... அதுக்கான விலையைக் கொடுத்துதான் ஆகணும்!"

  10. "இது ஒரு சாபம்... என் தலைக்குள்ள சுத்திக்கிட்டே இருக்கு, சாகற வரை என்னை விட்டுப் போகாது போல!"

  11. "- இனிமே இது நடக்காதுல்ல?

    - கண்டிப்பா நடக்கும்! ஃபென்டாஸ்டிக்கா,மார்வெலஸா, டிலைட்ஃபுல்லா நடக்கும்! ஏன்னா இப்போ அதைப்பண்ணப்போறது நான்!"

  12. "ஐ ஆம் அன்ஸ்டாப்பபிள்!"

  13. "இது போஸுக்குத் தெரிஞ்சா திரும்பி வருவான்... தானா வருவான்!"

  14. "- விடச் சொல்றியா?

    - நம்பச் சொல்றேன்!"

  15. "நான் உன்னோட ஃபேன் தெரியுமா? உனக்காக வெயிட் பண்றேன் தெரியுமா?"

  16. "வா, உனக்கு நான் காட்டுறேன்... ஃபேன் போய் சம்பவம்னா என்னனு காட்டுறேன்!"

2. டிமான்ட்டி காலனி 3 (தமிழ் - ஹாரர் த்ரில்லர்)

Demonte Colony 3
Demonte Colony 3

அருள்நிதி ஒரு அண்டர்ரேட்டட் ஹீரோ. இவரது ஸ்க்ரிப்ட் செலக்சன் பிரமாதமாக இருக்கும். வழக்கமான மசாலா கதைகளில் நடிக்கவே மாட்டார். மாறுபட்ட க்ரைம் திரில்லர், திகில் ஊட்டும் ஹாரர் திரில்லர் தான் இவரது சாய்ஸ்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான முதல் பாகம் 26 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் ஹிட்டானது. இரண்டாம் பாகம் 60 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. தற்போது வரவிருக்கும் மூன்றாம் பாகம் 75 கோடி வசூல் நிச்சயம், 100 கோடி வசூல் இலக்கு என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது.

இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன், மியா ஜார்ஜ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ். இசையமைப்பில், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். மிரட்டலான டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

3. மண்டாடி (தமிழ் - ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமா)

mandaadi
mandaadi source:youtube

'பரோட்டா' சூரி தற்போது ஹீரோ ஆகி விட்டார். 'விடுதலை பாகம் 1', 'கருடன்', 'கொட்டுக்காளி', 'விடுதலை பாகம் 2' என அவரது படங்கள் வரிசையாக வெற்றி பெற்று வருகின்றன.

'மண்டாடி' என்றால் கடலில் அலைபவன் (படகோட்டி) என்று அர்த்தம். 'செல்ஃபி' (2022) பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் சொந்தப்படம் இது.

சூரி, மஹிமா நம்பியார், சத்யராஜ், கஹாஸ், பால சரவணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ட்ரெய்லரைப்பார்த்ததில் யூகித்த கதை:

நாயகன் சிறந்த படகோட்டி வீரன். சாம்பியனான அவன், தன் சொந்தக் கடலோர கிராமத்திலிருந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வேறு இடத்திற்குச் செல்கிறான். வில்லன் அந்த ஏரியாவில் இரு பிரிவுகளை உருவாக்கி சண்டை மூட்டி விடுகிறான்.

நாயகன் மீண்டும் ஊருக்கு திரும்பி, படகுப்போட்டியில் கலந்துகொள்ள ஒரு குழுவிற்குப் பயிற்சி அளிக்கிறான். இறுதியில் படகுப்போட்டியில் நாயகன் வென்றானா, வில்லன் வென்றானா என்பதே க்ளைமாக்ஸ்.

ரசித்த வசனங்கள்:

  1. "இந்தக் கடல் எவ்வளவு பெருசோ, அதிலிருக்கும் ஆபத்துகள் அதைவிடப் பெருசு."

  2. "சிங்கம் இல்லாதப்ப ஓநாய்க்கூட்டம் அரசாளும் கதையா..."

  3. "இந்த ஊரோட படகுப் பந்தயம்னா அது 'சுனாமி ரைடர்ஸ்' தான்... எவன் வந்தாலும் அதைத் தடுக்க முடியாது!"

  4. "லோக்கல் பசங்க இல்லாத டீம்னா அது எப்படி ஊர்க்காரங்க டீம் ஆகும்?"

  5. "பந்தயம்ங்கிறது யார் பெரிய ஆளுனு காட்டிக்கிறதுக்காக நடக்குற போட்டி இல்லை... பந்தயம்ங்கிறது அறிவு!"

  6. "தொழிலைக் காப்பாத்திக்க என்ன வேணா நான் செய்வேன்."

  7. "உன்னை நம்புறவங்களுக்குச் சாவையும் ஒப்பாரியையும் தவிர்த்து என்னதான் நீ கொடுக்க முடியும்?"

  8. "இன்னைக்கு மட்டும் நாம ஜெயிக்கலைனா, நம்ம பசங்க கரையில நின்னு வேடிக்கை பார்க்கும் கூட்டமா மாறிடுவாங்க!"

  9. "தரையில வேணா அவன் பெரிய ஆளா இருக்கலாம்... தண்ணியில நாமதான் கிங்!"

  10. "புள்ளய எதிரிகிட்ட இருந்து காப்பாத்தி துரோகிகிட்ட ஒப்படைச்சிருக்கே..."

4. ரீ யூனியன் (தமிழ் - கேங்ஸ்டர் ஆக்‌ஷன் டிராமா)

reunion aruldas
reunion aruldas

அருள்தாஸ், அனுபமா குமார் நடிப்பில் சாட்ஸ் ரெக்ஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லோ பட்ஜெட் படம் இது.

பள்ளியில் படிக்கும்போதே ரவுடியாக இருந்த ஒரு க்ரூப், பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்றுகூடுகிறது. அவர்களுக்குள் இருக்கும் பழைய பகையும் மறைக்கப்பட்ட சில உண்மைகளும் வெளிவர, மோதல் வெடிப்பதே கதை.

5. VK 30 (கன்னடம் / தமிழ் - ஆக்‌ஷன் டிராமா)

VK 30
VK 30 SOURCE:Oneindia

துனியா விஜய் நடிப்பில், 'R.R. வெற்றிவேல்' என்ற தம்பி மகேஷ் இயக்கியுள்ள திரைப்படம் இது.

6. மகேந்திரகிரி வாராஹி (தெலுங்கு / தமிழ் - மித்தலாஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர்)

Mahendra varahi
Mahendra varahi source:telugu 360

ஐஸ்வர்யா ராஜேஷ், சுமந்த், மாளவிகா நாயர், மீனாட்சி கோஸ்வாமி, பிரம்மாநந்தம் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தைச் சந்தோஷ் ஜாகர்லபுடி இயக்கியுள்ளார்.

ட்ரெய்லரைப்பார்த்ததில் யூகித்த கதை:

மகேந்திரகிரி என்ற ராஜவம்சத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் அவர்களது 33-வது வயதில் உயிரிழக்கின்றனர். வாரணாசியில் இருக்கும் வாராஹி என்ற அம்மனின் சாபம் என்று கூறப்படுகிறது. இந்த மர்ம மரணங்கள் 150 வருடங்களாக ஏன் தொடர்கிறது என்பதை நாயகனான தொல் பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பதே கதை.

7. வேம்பயர்ஸ் சகா (ஹிந்தி / தமிழ் - ரொமாண்டிக் ஆக்‌ஷன் ஹாரர் த்ரில்லர்)

இயக்குநர் ஜூபர் கே. கான் இயக்கத்தில் அப்துல் அத்னான், ஜூபர் கே. கான், சனா சுல்தான், புஷ்ரா ஷேக் ஆகியோர் நடித்துள்ளனர்.

ட்ரெய்லரைப்பார்த்ததில் யூகித்த கதை:

ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் நான்கு காதல் ஜோடிகள் உள்ளனர். பழங்கால 'வேம்பயர்' (இரத்தக் காட்டேரி) கூட்டத்திற்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே மீதிக்கதை.

8. ரணபாலி (தெலுங்கு / தமிழ் - ஹிஸ்டாரிக்கல் ஆக்‌ஷன் டிராமா)

ranabaali
ranabaali

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியுடன் அர்னால்ட் வோஸ்லூ இணைந்து நடித்துள்ளனர். ராகுல் சங்கிருத்யன் இயக்கியுள்ளார்.

ட்ரெய்லரில் ஒரே ஒரு மனிதனின் பேராசையால் ஒரு பேரரசே அழிந்த கதை என்கிறார்கள்.ராஜா காலத்துப்படம் போல் தெரிகிறது..பாகுபலி டைப்பில் பிரம்மாண்டமாக முயற்சித்திருக்கிறார்கள்.

9. பிரதம த்ருஷ்டியா குற்றவாளி (மலையாளம் / தமிழ் - மிஸ்ட்ரி இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லர்)

பார்வதி திருவோத்து, உன்னி மாயா பிரசாத், மேத்யூ தாமஸ், சித்தார்த் பரதன், விஜயராகவன் ஆகியோர் நடிப்பில், சாஹத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம். இதில் நடிகை பார்வதி திருவோத்து முதன்முறையாகக் போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com