
திரையிசை வாயிலாக உலகெங்கும் கோடானு கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள இசைஞானி இளையராஜா, இந்திய இசையுலகில் சுமார் 50 ஆண்டுகளாக வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
திருமணம், விழாக்கள், கல்லூரி விழா என எந்த பங்ஷனாக இருந்தாலும் இளையராஜாவின் பாடல்கள் தான் அதிகமாக இடம் பிடித்திருக்கும். இவரின் மெல்லிசை பாடல்களை கேட்டுவிட்டு தூங்கும் ரசிகர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். நீண்ட தூரம் வாகனத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் இவரின் பாடல்களை தான் அதிகளவு கேட்டுகொண்டே செல்வார்கள், ஏனெனில் அப்போது தான் பயண களைப்பு தெரியாது.
இவரது மயக்கும் இசையால் உருவான பாடல்களை கேட்க இனிமையாகவும், தாலாட்டும் வகையிலும் இருக்கும். அந்தளவு இசையால் ரசிகர்களின் மனதை கட்டி போட்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவருடைய பாடல்கள் பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் 1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளது மட்டுமில்லாமல் பாடல்களும் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி பிரம்மாண்ட முறையில் பல மேடை இசை நிகழ்ச்சிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் அரங்கேற்றி இருக்கிறார்.
இளையராஜா எந்தளவுக்கு பிரபலமானவரோ அந்த அளவுக்கு இவர் பேசும் வார்த்தைகள் அடிக்கடி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி தலைப்பு செய்திகளாக மாறிவிடும். இளையராஜா பேச்சு பற்றி பலரும் கருத்து கூறி வந்தாலும் அவருடைய இசை பலருடைய மனதின் வலிகளை வருடும் மயிலிறகாக இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. சமீபத்தில் இவரது இசையில் வெளியான 'விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இவர் தற்போது 'வேலியன்ட்' (Valiant) என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இயற்றியிருக்கிறார். இது வருகிற 8-ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட உள்ளது. ஒரு சிம்பொனியை உருவாக்குவதற்காக பலர் பல வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கையில் இசைஞானி இளையராஜா 35 நாட்களில் உருவாக்கியது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் சிம்பொனி சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ பல பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், அண்ணாமலை, எல்.முருகன், கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.