தனுஷ் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில், விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக பிஸியாக நடித்து வருபவர் நடிகர் தனுஷ். அடுத்தடுத்து பல படங்களை அடுக்கி வைத்திருக்கும் தனுஷின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் கடைசியாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து அசத்தினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், குபேரா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது இசை உலகில் கொடிகட்டி பறக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது. இசை ஜாம்பவான் என சொல்லக்கூடிய இவரின் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்நோக்கி பலரும் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் தனுஷ் தான் நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இந்த படத்தையும் இயக்கவுள்ளார். தன்னுடைய சொந்த கதைக்கு தானே அதாவது இளையராஜாவே இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றும் இப்படத்தில் கலை இயக்குனராக முத்துராஜ் பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இளையராஜா பயோபிக் படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொண்டார். மேலும் தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இளையராஜா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இந்த நிகழ்வின் போது வெளியிட்டனர். கையில் ஹார்மோனிய பெட்டியுடன் இளையராஜா முதன்முதலில் சென்னைக்கு வந்திறங்கியதை நினைவுபடுத்தும் வகையிலான புகைப்படம் அந்த பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்று உள்ளது.
இளையராஜாவின் இசை என்றாலே தனி சிறப்பு தான். இசை கொடுத்த முத்தின் வாழ்க்கை வரலாறு படமாவதால் இளையராஜாவின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.