
விடிந்ததும் விடியாத அந்த பொழுதுகளில் "நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்தது ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே" என்று இளையராஜாவின் பாடலை வானொலியில் கேட்டவாரே எழுந்திருந்தது 90-களின் பொற்காலம் . தொலைக்காட்சியிலோ வானொலியிலோ, இந்த நிமிடம் ஏதேனும் ஒரு பாட்டு சேனலை மாத்தினால் கூட அதில் ஒரு இளையராஜாவின் பாடல் ஓடிக் கொண்டிருக்கும். அந்தளவிற்கு இசையில் இளையராஜாவின் ஆளுமை பெரியதாக இருக்கும் .
தேனி மாவட்டத்தின் , அழகிய கிராமமான பண்ணைபுரத்தின் 1943 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி பிறந்தவர் தான் ஞானதேசிகன் என்கிற இளையராஜா, இசையில் இவர் ஒரு பெரிய ராஜா. 2018 ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது பெரிய குடிமை விருதான பத்மவிபூஷன் விருதைப் பெற்றவர். சிறந்த இசை மற்றும் பின்னணி இசைக்காக இதுவரை 5 தேசிய விருதுகளை பெற்ற பெருமை மிக்கவர்.
இசையுலகில் இளையராஜா செய்த சாதனைகள் அளப்பரியது.1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் திரை இசையில் அறிமுகமான இளையராஜா , இதுவரை பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் , ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த சாதனை செய்தவர். அதற்கு முன்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குழுவில் பணியாற்றியுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் கட்சி பிரச்சாரக் குழு பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இளையராஜாவின் அறிமுகக் காலத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களே திரையில் கோலோச்சிக் கொண்டிருந்தார். அவரது வெற்றிக்கு அன்றைய காலக்கட்டத்தின் இலக்கிய பாணி பாடல்கள் பெரிதும் உதவின. எம்.எஸ்.வி இசையில் கவித்துவமான பாடல் வரிகள் , அந்த பாடலைப் பாட கம்பீரமான குரல் , மென்மையான இசைக்கோர்வை போன்றவற்றை கடைப்பிடித்தார். இளையராஜா இந்த பாணியில் இருந்து விலகி தனக்கு என்று தனிப்பாணியை அமைத்து திரையுலகில் மேலேழும்பத் தொடங்கினார்.
இளையராஜா இசையில் இலக்கிய ,கவித்துவ முறைப் பாடல் வரிகளை தவிர்த்து , பேச்சு வழக்கு மொழியில் பாடல் வரிகளை அமைக்க தொடங்கினார்.அன்னக்கிளி திரைப்படத்தில் " மச்சான பார்த்தீங்களா ? மலைவாழ தோப்புக்குள்ளே! " என்று இயல்பான பேச்சுமொழி வரிகள் அன்று வித்தியாசமாக இருந்தது. முதல் மரியாதை படத்தின் " பூங்காத்து திரும்புமா?" என்ற வரிகள் கிராமத்தின் பட்டி தொட்டி எங்கும் இளையராஜாவின் புகழைப் பரப்பியது. இந்த பாடல்கள் எளிதில் அனைத்து தரப்பு மக்களை கவர , புதிய பாணி இசையை அடுத்த தலைமுறை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.1980 களிலிருந்து இளையராஜாவின் ஆட்சி தமிழ் திரையில் தொடங்கியது.
தமிழ் திரையின் பெரிய இயக்குனர்களான பாலச்சந்தர் , பாரதிராஜா , S.P.முத்துராமன் , மகேந்திரன் , பாலு மகேந்திரா , மணிரத்னம் போன்றோரின் ஆஸ்தான இசையமைப்பாளராக இளையராஜா மாற தமிழ் சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளர் என்ற மகுடமும் அவரை தேடி வந்தது. அப்போதைய காலக் கட்டத்தில் ஒரு நாளில் ஒரு படத்தின் இசையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இளையராஜா இருந்துள்ளார். அதை திறமையாக செய்ததால் வந்தது ஆயிரத்தை தாண்டிய திரைப்படங்கள். தமிழில் முதன் முதலாக திரை இசையை ஸ்டீரியோ பாணிக்கு மாற்றியதும் , கம்யூட்டரை பயன்படுத்தி இசையமைத்ததும் அவர் தான்.
ஒரு படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை இன்றியமையாததாக இருந்தது. பல நடிகர்களின் வெற்றிக்கு இளையராஜா துணையாக இருந்தாலும் மோகன் , ராமராஜன் , ராஜ்கிரண் போன்ற நடிகர்கள் திரையில் பிரகாசிக்க இளையராஜாவின் பாடல்கள் தான் காரணம் என்றால் மிகையல்ல. அதிலும் மோகனின் பெரிய ஸ்டார் அந்தஸ்திற்கு பின்னால் இளையராஜா முழுமையாக இருந்தார். இருமுறை சிம்பொனி அமைத்த பெருமை பெற்றாலும் திருவாசகத்தை இசையில் ஏற்றியதற்கு அதிக மகிழ்ச்சி அடைகிறார் அவர். நாளை அவரது பிறந்தநாள் இசையுலகில் ஒரு அத்தியாயம் தொடங்கிய நாளாக இருக்கும்.