லண்டனில் இளையராஜா தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துள்ளார். இந்திய நேரப்படி மார்ச் 9ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்ச்சிதான் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இளையராஜா, அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். இவரது பாடலுக்கு இன்றும் பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்தக் காலத்து ஆட்கள் முதல் இன்றைய இளைஞர்கள் வரை அனைவருக்குமே இவரின் பாடல் ஒரு மருந்து என்றே கூறலாம். இவருடைய பாடல்களை கேட்டுத் தூங்கும் இளைஞர்கள் ஏராளம். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கதை சொல்லும். அதுவும் இசை மூலமே நம்முடைய உணர்வுகளை மாற்றும் திறன் இவரின் பாடல்களுக்கு உண்டு.
இளையராஜா 7000-க்கும் அதிகமான பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அதே போன்று 20000-க்கும் அதிகமான இசை கச்சேரிகளை நடத்தியிருக்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் நாட்டுப்புற இசையை வெளிப்படுத்தி வந்த இளையராஜா பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக்குழுவில் இணைந்து 10 ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இவரின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில், சமீபத்தில் சென்னையில் உள்ள அவரது ஸ்டூடியோவிற்கு ரஷ்யாவைச் சேர்ந்த நடன கலைஞர்கள் தங்களுடைய ஸ்டைலில் 'ஓ பட்டர்ஃளை பட்டர்பஃளை' என்ற பாடலுக்கும், 'பூவே செம்பூவே' என்ற பாடலுக்கும் டான்ஸ் ஆடி அசத்தினார்கள். இதுவே அவரின் பாடல்கள் உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சி.
இப்படியான நிலையில், சமீபத்தில்தான் நீண்ட நாட்களாக சிம்பொனி எழுதி வருவதாகவும், விரைவில் அதை அரங்கேற்றுவேன் எனவும் தெரிவித்தார். இன்று அதன் அரங்கேற்றத்தை நடத்தி முடித்தார். இந்த இசை நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசை குழுக்களில் ஒன்றான ராயல்பிலார்மாலிக் ஆர்கெஸ்ட்ரா இசை கலைஞர்கள் தான் இசையமைத்தனர்.
இந்த நிகழ்ச்சி ஈவன்டிம் அப்பல்லோ அரங்கத்தில் (Eventim Apollo Theatre) நடைபெற்றது. இங்கு மொத்தம் 3500 இருக்கைகள் இருக்கின்றன. லண்டன் நேரப்படி மார்ச் 8ம் தேதி மாலை 7 மணிக்கும், இந்திய நேரப்படி மார்ச் 9ம் தேதி நள்ளிரவு 12.30க்கும் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சி. இளையராஜாவின் இசைக் குறிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
இதன் மூலம் மொசாட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் இளையராஜாவும் சிம்பொனி இசை கலைஞர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு நமது கல்கி குழுமத்தின் ஆலோசகர் ப்ரியா பார்த்தசாரதி நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
இந்த வீடியோ மூலம் பல விஷயங்கள் தெரிந்துக்கொள்ள முடிகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியர்கள் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் இளையராஜா ரசிகர்களும் வருகைத் தந்திருக்கின்றனர்.
இந்த சிம்பொனி நிகழ்ச்சி நான்கு வரிசையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதலாவதாக Sonata (ஒரு கருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பது), இரண்டாவதாக Slow Exploration, மூன்றாவதாக Minuet, நான்காவதாக மீண்டும் Sonata வாசிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, இயக்குநர் பால்கி மற்றும் மேலும் சிலர் வருகைத் தந்திருக்கின்றனர். மேலும் அங்கு வந்த வெவ்வேறு நாட்டினர் சிலர் இந்நிகழ்ச்சி குறித்து பேசியிருக்கின்றனர்.
“நான் தமிழ் பாடல்கள் கேட்டதில்லை. ஆனால், I really enjoyed it. இளையராஜாவுக்காகவே இங்கு வந்தேன்” என்று ஒருவர் கூறினார்.
இதுபோல் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
ஏற்கனவே இளையராஜா 1993ம் ஆண்டு லண்டனில் சிம்பொனி அரங்கேற்றினார். ஆனால், அப்போது எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தன. அது மிகவும் இந்தியத்தன்மையோடு இருந்ததாக கூறப்பட்டது. ஆகையால், அவர் அந்த ப்ராஜக்ட்டை அப்படியே நிறுத்திவிட்டார்.
தற்போது மீண்டும் அதே லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்ததோடு அதில் வெற்றியும் பெற்று, இசைஞானி இளையராஜா, தானொரு இசை ராஜா என்பதை நிரூபித்துவிட்டார்.