விமர்சனம்: இந்தியன் 2 - மாஸ் & கிளாஸ்! இந்தியன் 3, எப்போ ஷங்கர் சார்?
ரேட்டிங்(4 / 5)
28 ஆண்டுகளுக்கு பின்பு கமல் - ஷங்கர் கூட்டணியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'இந்தியன் 2 ஜீரோ டாலரன்ஸ்' திரைப்படம் வெளியாகி உள்ளது.
இந்தியன் முதல் பாகத்தில் வசனம் எழுதிய சுஜாதா இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை. ஏ.ஆர் ரஹ்மானுக்கு பதில் அனிருத். இந்தியன் 2 படம் எப்படி இருக்கும் என்பதை பல்வேறு விமர்சகர்கள் விமர்சனங்களை முன் வைத்தார்கள். இந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் விதமாக வந்திருக்கிறது இந்தியன் 2.
நாட்டில் நடக்கும் லஞ்ச ஊழல்களை பொறுத்துகொள்ள முடியாத சமூக வலைத்தள ஊடகவியலாளர்கள் மூன்று பேர் போராட்டம் நடத்தி தோற்றுப்போக, வேறு வழியில்லாமல் 28 ஆண்டுகளுக்கு முன்பு லஞ்சவாதிகளை வேட்டையாடிய இந்தியன் தாத்தாவை மீண்டும் வரவழிக்க சமூக வலைத்தளங்கள் வழியாக வேண்டுகோள் வைக்கிறார்கள்.
வெளிநாட்டில் வர்மக் கலையை கற்றுதரும், நூறுவயதை கடந்த இந்தியன் தாத்தா இவர்களுக்காக இந்தியா வருகிறார். வரும் போதே வெளிநாட்டில் சில சம்பவங்களை செய்து விட்டு வருகிறார். இங்கே வந்து தவறானவர்களை திருத்துவதற்கு முன்னால் இளைஞர்களிடம் 'உங்களை சுற்றியுள்ள லஞ்சத்தை களை எடுங்கள்' என்று சொல்லி விட்டு வேறு சிலரை வேட்டையாட சென்று விடுகிறார். இந்தியன் தாத்தா கம் பேக் தந்து என்ன செய்தார் என்பதுதான் இந்தியன் 2 கதை.
முதல் பாகத்தில் 500,1000 என்று லஞ்சம் வாங்கியவர்களை கொலை செய்த தாத்தா இந்த இரண்டாம் பாகத்தில் பெரிய கார்ப்பரேட் முதலாளிகளை வர்மக்கலையை பயன்படுத்தி வித்தியாசமாக வீழ்த்துகிறார். உலக நாயகன் என்பதற்கு பதில் யூனிவர்சல் நாயகன் என பட்டம் தரலாம் போல. இந்தியன் முதல் பாகத்தில் ஒரு கெட்டப்பில் வந்தவர் ஒரு ஜப்பானியனாக, குப்பை அள்ளுபவராக பல கெட்டப்புகளில் வருகிறார். கமல் இந்த கெட்டப்புகளில் அசால்ட்டாக நடித்திருப்பதை பார்க்கும் போது, எழுந்து நின்று கை தட்டாமல் இருக்க முடியவில்லை. ஹேட்ஸ் ஆப் கமல் சார்!
சித்தார்த்தின் நடிப்பு எமோஷனலாக இருக்கிறது. நெடுமுடி வேணு, விவேக், மனோ பாலா போன்றவர்களின் நடிப்பை பார்க்கும் போது எத்தனை சிறந்த கலைஞர்களை இழந்து விட்டோம் என்று மனம் வருந்துகிறது. படத்தின் சில இடங்களில் முதல் பாகத்தில் இடம் பெற்ற 'கப்பலேறி போயாச்சு' பாடலின் ட்யூன் இடம் பெறுகிறது. இதற்கு பேசாம ரஹ்மானையே மியூசிக் போட வைத்திருக்கலாமே சார்!
ரவி வர்மனின் ஒளிப்பதிவு நம்மை படத்துடன் பயணிக்க செய்கிறது. தன் 70வது வயதில்,105 வயது இந்தியன் தாத்தாவாக ஒரு லைவ் பர்பாமென்ஸை தந்துள்ளார் கமல். குடும்பத்துடன் தன்னை ரசிக்க வைக்கிறார் இந்த தாத்தா.