பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிவாஜி கணேசன். அவர் கர்ணனாக நடித்து மக்கள் மனதில் அந்த கதாபாத்திரத்தைப் பதிய செய்தவர் சிவாஜி. அப்படியிருக்கையில், நிஜத்திலும் இவர் ஒரு கர்ணனாகவே சில வேலைகளை செய்திருக்கிறார். தானமா? என்றுதானே முதல் கேள்வி உங்களுக்கு எழுகிறது. ஆனால், அது இல்லை.
சிவாஜி ஒரு பேட்டியில் கூறிய விஷயத்தை முதலில் பார்ப்போம்.
“ எனக்கு ஒரு ஆறு ஏழு வயது இருக்கும்போது, என் வீட்டு பக்கத்தில் கட்டபொம்மன் நாடகம் போட்டார்கள். அப்போதிலிருந்து எனக்கு பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது எங்கள் வீட்டில் அவ்வளவு வறுமை. பசியில் வாடினோம். அந்த சமயத்தில் இப்படி ஒரு ஆசை.
என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். வெளியே போய் எனக்கு அப்பா அம்மாவே இல்லை. நான் ஒரு அநாதை என்று நாடகம் செய்து நாடக கம்பேனியில் வேலை கேட்டேன். அப்போது அனைவருக்கும் பாட்டு என்றால் பிடிக்கும். நானும் நன்றாக பாடுவேன். ஆகையால், என்னை உடனே சேர்த்துக்கொண்டார்கள்.
பிறகு ஒரு 7 வருடங்கள் கழித்துதான் என் அம்மாவை எதர்ச்சியாகப் பார்த்தேன். அதுவரை அவர்கள் என்னை தேடவே இல்லைப் போல். நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தார்களோ என்னவோ? அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தேன். நாடகத்தில் நடித்தேன். அப்படியே சினிமாவிலும் வந்துவிட்டேன்.” என்றார்.
நினைத்துப் பாருங்களேன். கர்ணனும் வில்வித்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் வீட்டைவிட்டு வெளியே வந்து, தான் ஒரு அநாதை என்று சொல்லி, தான் யார் என்பதையே மறைத்து பரசுராமரிடம் வில்வித்தைக் கற்றுக்கொண்டு அர்ஜுனனுக்கே போட்டியாக மாறினார்.
அதேபோல்தான், கட்டபொம்மன் நாடகம் பார்த்து தானும் ஒரு நடிகன் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் யார் என்பதை மறைத்த சிவாஜி, சினிமாத்துறையில் என்றென்றும் மறக்கமுடியாத நடிகனாக வலம் வந்தார். நினைவுகளால் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இதுதான் கர்ணனுக்கும் சிவாஜிக்கும் உள்ள ஒற்றுமை.