விமர்சனம்: இந்திரா - மர்மமான கொலைகள்... வெட்டப்பட்ட கைகள்! திரில்லர் ரசிகர்களுக்கு விருந்து!
ரேட்டிங்(3 / 5)
சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, சுனில் நடிப்பில் வெளிவந்துள்ள படம் இந்திரா. போலீஸ் துறையில் சஸ்பென்ஸ் ஆகி மன வேதனையில் குடித்து கொண்டு இருக்கிறார் வசந்த் ரவி. இதனால் கண் பார்வையை இழக்கிறார். சென்னை நகரில் ஒரு சைக்கோ கொலைகாரன் பல கொலைகளை செய்து விட்டு கொன்ற நபர்களின் ஒரு கையை துண்டித்து எடுத்து செல்கிறான். இதை செய்தது யார் என்று கண்டுபிடிக்க போலீஸ் திணறுகிறது. இந்த சைக்கோ வசந்த் ரவியின் மனைவியையும் கொன்று, கையை வெட்டி எடுத்து செல்கிறார். இதனால் மனம் உடைந்து போகும் வசந்த் ரவி, தனது நண்பர் உதவி கொண்டு அந்த சைக்கோவை போராடி கண்டு பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைக்கிறார்.
அதற்குள் படம் முடிந்து விட்டதே என்று நாம் யோசிக்கும்போது, வசந்த் ரவியின் மனைவியை புகைப்படத்தை பார்த்து சைக்கோ "இந்த பெண்ணை நான் கொல்ல வில்லை, இந்த பெண் யார் என்று தெரியாது" என்று சொல்லி ட்விஸ்ட் தருகிறான். அப்படி என்றால் வசந்த் ரவியின் மனைவியை கொன்றது யார்? கொலை செய்ய காரணம் என்ன என்று சொல்கிறது மீதிக்கதை.
படத்தின் முதல் பாதி சைக்கோ திரில்லர் பாணியில் நகர்ந்து, இரண்டாம் பாதி வேறொரு தளத்தில் செல்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதிதான் பல ட்விஸ்ட்களும், சுவாரசியமும் நிறைந்ததாக உள்ளது. 'Crime and punishment ' என்ற ஒன்லைனில் ஒரு சரியான திரில்லர் படத்தை தந்துள்ளார் டைரக்டர்.
படத்தின் சுவாரசியத்தை அதிகரிப்பதில் ஒளிப்பதிவு மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் ஒரு அப்பார்ட்மெண்ட் வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இங்கே வடிவமைத்துள்ள லைட்டிங் சிறப்பாக உள்ளது.
கண் தெரியாத நபராக நடிப்பில் நம்மிடம் பரிதாபத்தை அள்ளி செல்கிறார் இந்திர குமாராக வரும் வசந்த் ரவி. ஒரு சைக்கோ நபராக நடிப்பில் சபாஷ் சொல்ல வைக்கிறார் சுனில்.
ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ஹீரோயின் மெஹரீன் அழுத்தமா நடிப்பை தந்துள்ளார். படத்தின் ஒரே மைனஸ் பின்னணி இசை தான். சில இடங்களில் வசனங்களை சரியாக கேட்க முடியாத அளவிற்கு பின்னணி இசை இருக்கிறது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திரா படம் பார்க்க சென்றால், இப்படம் ஒரு மாறுபட்ட காட்சி அனுபவத்தை தரும்.