
தமிழகம் மட்டுமல்ல உலக அளவில் எதிர்பார்ப்பைக் கூட்டி வெளிவரும் முன்பே வசூலில் சாதனை படைத்த படம் கூலி. அந்த எதிர்பார்ப்பையும் ஆவலையும் பூர்த்தி செய்ததா படம்? பார்க்கலாம்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு இன்று வெளியான படம் கூலி. தேவா (ரஜினி) ஒரு மேன்சன் நடத்தி வருகிறார். அவருடைய நெருங்கிய நண்பரான ராஜசேகர் (சத்யராஜ்) இறந்து விட்டதாகத் தகவல் வருகிறது. ராஜசேகருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் போனவரை அவரது மகளான ஷ்ருதி ஹாசன் திட்டி அனுப்பி விடுகிறார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நினைத்த ரஜினி அதற்கான காரணத்தைத் தேடிச் செல்கிறார்.
ஒரு துறைமுகத்தில் கடத்தல் சாம்ராஜ்ஜியம் நடத்தி வருபவர் நாகார்ஜுனா. அவருக்கு உதவியாகத் தயாள் என்ற பாத்திரத்தில் சௌபின் சாஹிர். தங்கள் கூட்டத்தில் ஊடுருவிப் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளைக் கண்டுபிடித்துக் கொல்வது கடத்தல் தவிர இவர்களது வேளைகளில் ஒன்று. சத்யராஜின் மறைவிற்கு இவர்கள் தான் காரணம் என்று தெரிந்து கொண்ட ரஜினிகாந்த் இவர்களுடன் மோதிப் பழி தீர்க்க நினைக்கிறார். பிறகு என்ன ஆனது என்பது தான் கதை.
கதை என்னவோ அரதப்பழசான கதை தான். சுவாரசியமான திரைக்கதையும் லோகேஷ் கனகராஜின் மேஜிக்கும் மட்டுமே இதை மூன்று மணி நேரம் தாக்குப் பிடிக்க வைக்கும். மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் அதை எஸ்டாபிளிஷ் செய்வதற்கே ஏகப்பட்ட நேரம் எடுத்துக் கொள்கிறார் லோகேஷ். மூன்று பாடல்கள் முதல் பாதியிலேயே வந்து விடக் கதை ஓர் இடத்தை விட்டு நகரவே இல்லாதது போல் எண்ணம் எழுகிறது. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. சிக்கிட்டு பாட்டும், மோனிகாவும் திரையரங்கத் திருவிழா காட்சிகள் தான். அகன்ற திரையில் அனிருத் ராஜ்ஜியம் பளிச்சென்று தெரிகிறது.
மாற்றி மாற்றிக் கொலை செய்வதும் தொடர்ந்து வரும் சண்டைக்காட்சிகளும் ஒரு கட்டத்திற்கு மேல் என்னடா கதைக்குள் செல்லவே மாட்டார்களா என்று எண்ண வைப்பது நிஜம். ரஜினியின் பிளாஷ் பாக் காட்சிகளும் நெகட்டிவ்களிலேயே காட்டப்பட, ரசிகர்கள் கைதட்ட ஆரம்பித்ததும் அடுத்த காட்சிக்குச் சென்று விடுகிறார்கள். இப்படி ரஜினி முப்பது வருடங்களுக்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தார் என்று சொல்லாமலேயே இடைவேளை வந்து விடுகிறது. உண்மையைச் சொன்னால் அந்த இண்டர்வெல் பிளாக்கிலிருந்து தான் கதையே ஆரம்பிக்கிறது படமும் சற்று சுவாரசியம் கூடுகிறது.
படத்தின் உண்மையான பரபரப்பு இடைவேளைக்கு அடுத்த காட்சியிலிருந்து பற்றிக்கொள்கிறது. சௌபின், ரச்சிதா ராம், உபேந்திரா என்று அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்களில் சிலது எதிர்பாராதது. இந்த இடங்களில் தான் லோகேஷின் எழுத்து ஜெயிக்கிறது. யோசிக்கக் கூட நேரமின்றி அடுத்தடுத்து வரும் சண்டைக் காட்சிகளால் பரபரவென்று நகர்கிறது. லாக்கர் ரூம் சண்டை, மேன்ஷன் சண்டைக்காட்சி, இறுதியில் துறைமுகத்தில் சண்டைக்காட்சி, என ரசிகர்கள் கைத்தட்டலுக்குக் குறைவில்லை. அன்பறிவுக்கு தனியாக ஒரு பாராட்டு.
சற்றே தொய்வு ஏற்படும் போதெல்லாம் 'உள்ளேன் ஐயா' என்று வந்து விடுகிறார்கள் அனிருத்தும், ரஜினியும். எழுத்தில் லோகேஷ் கோட்டை விட்டதை இவர்கள் சமன் செய்கிறார்கள்.
மெயின் வில்லனாக நாகார்ஜுனா. இன்னும் கொஞ்சம் பெட்டராக எழுதப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. வில்லனுக்கு உண்டான முரட்டுத் தனம் மிஸ்ஸிங். ஸ்டைலாக இருப்பதால் வில்லன் என்று நமக்குப் பதிவாகவே நேரம் எடுக்கிறது! இதற்குச் சௌபின் சாகர் பரவாயில்லை. பலவிதமான உணர்ச்சிகளுடன் நல்ல ஸ்கோப் இருக்கும் பாத்திரம். கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் அந்தப் பாத்திரத்தின் தன்மை மாறாமல் நடித்திருக்கிறார்.
ஷ்ருதி ஹாசன் படம் முழுதும் வருவது போல இருந்தாலும் இடைவேளைக்குப் பின் வரும் ரச்சிதா ராம் அட என்று சொல்ல வைக்கும் அளவு இவரைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார்!
ஆமீர் கான், உபேந்திரா பாத்திரங்கள் ஊறுகாய்கள் போலத் தான்.
ரஜினி ரசிகர்கள் ரஜினியை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்த காலம் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை. மொமென்ட்கள் மட்டுமே ஒரு முழுப் படத்தையும் தாங்கிப் பிடிப்பது சாத்தியமில்லை. ரஜினி என்ற ஒரு மனிதர் எவ்வளவு தான் சுமக்க முடியும்?!
ரஜினியின் பழைய படங்களில் நாம் ரசித்த அனைத்துக் காட்சிகளையும் ஏதாவது ஒரு விதத்தில் தனது திரைக்கதையில் நுழைக்க வேண்டும் என்று முயல்வது சரி. ஆனால் முழுக்க முழுக்க வில்லன்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு கதையை எழுதி (ரஜினி உள்பட) தனது பாணியில் ஒரு படத்தைக் கொடுப்பதில் லோகேஷ் கனகராஜ் சற்று அதிகமாகவே சிரமப்பட்டிருக்கிறார். அந்த விதத்தில் லோகேஷ் படமாகவும் இல்லாமல் ரஜினி படமாகவும் இல்லாமல் அமைந்து போனது படத்தின் ஆகப் பெரிய குறை. பிளாஷ் பேக் காட்சிகளுக்கு இவர்கள் செய்துள்ள டிஏஜிங் பெரிதாக ஒட்டவில்லை நமக்கு. அதே போல மிக முக்கியமான ஒரு பிளாஷ் பேக்கை மூன்று நிமிட சிங்கிள் ஷாட்டில் ரஜினியின் வசனத்திலேயே கடத்தி விடுகிறார்கள். அது எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை.
தன்னுடைய கடத்தல் உலகில் ரஜினியை நுழைத்து அவருக்காக ஒரு படத்தைத் தர வேண்டும் என்ற முயற்சியில் லோகேஷ் பாதிக் கிணறு மட்டுமே தாண்டி இருக்கிறார். நட்சத்திரப் பட்டாளங்களைச் சேர்க்க இவர் எடுத்துக் கொண்ட முயற்சியில் பெரும்பகுதியைக் கதையைச் செம்மைப் படுத்துவதில் எடுத்துக் கொண்டிருக்கலாம் என்பதே ஒரு சாதாரணச் சினிமா ரசிகனின் ஆதங்கமாக இருக்கும். ரஜினி ரசிகர்களுக்கு அவர்கள் ரசிக்கப் பல காட்சிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு பொது ரசிகனுக்கு..?
கடைசியாக அந்த ஆயிரம் கோடி வசூல். இருக்கவே இருக்கிறது ஜெயிலர் 2! அதில் திரும்ப ஆரம்பிக்கலாம். ஆனால் ரஜினி படங்களைப் பற்றி அவ்வளவு எளிதாக அனுமானிக்க முடியாது. எதிர்பாராமல் பற்றிக் கொண்டு ஓடும் படங்களும் அவருக்கு அமைந்ததுண்டு. ஆனால் அவை குடும்பமாக வந்து பார்த்து வெற்றி பெற்ற படங்கள். A சான்றிதழ் பெற்றுவிட்டதால் இதில் அந்தச் சாத்தியக் கூறும் சற்றுக் குறைந்து விட்டது. பார்க்கலாம் எப்படிப் போகிறதென்று.