பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கல்கி 2898 AD படத்தின் முக்கிய அப்டேட் வெளியான நிலையில், X தளத்தில் கல்கி 2898 AD என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான அஸ்வத்தாமா கதாப்பாத்திரத்தை வீடியோ கிளிம்ஸ் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் கல்கி 2898 AD படம். 600 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அறிவியல், புராணம் கலந்த படமாக உருவாகி வரும் இப்படம், அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதையடுத்து, படக்குழு படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் செய்திகள் அவ்வப்போது வந்தன. இப்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஸன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆகையால், படக்குழு ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. முதலில் பிரபாஸின் லுக் சில காலங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டது. அதேபோல், படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டது.
மகாசிவராத்திரி அன்று படத்தில் நடிக்கும் பிரபாஸின் பெயர் பைரவா என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று படத்தில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் பச்சனை அறிமுகம் செய்யும் ஒரு கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் அமிதாப் பச்சன் சிவலிங்கம் முன் தவம் செய்து வருகிறார். அதில் அமிதாப் பச்சன், “இறுதிபோர் வந்துவிட்டது. அவதார் வரவே இத்தனை காலம் காத்துக்கொண்டிருந்தேன். நான் துரோனருடைய மகன். அஸ்வத்தாமா.” என்று கூறுவதுபோல் தெலுங்கிலும் ஹிந்தியிலும் வீடியோ வெளியாகியுள்ளன.
இதேபோல்தான் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுத்தொடர்பாக இயக்குனர் நாக் கூறியதாவது, “இந்தப் படம் மகாபாரதத்திலிருந்து ஆரம்பித்து 2898 AD வரை இருக்கும். இது 6000 ஆண்டுகாலத்தின் கதை. ஒரு கற்பனை கதையாகவே இது எடுக்கப்பட்டுள்ளது.” என்று பேசினார்.
அறிவியல் மற்றும் புராணக்கதையின் கலவையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பைத் தாங்கி நிற்கிறது.