விமர்சனம்: இறுதி முயற்சி - 'கடன் வாங்குற ஐடியா இருந்தா இந்த படத்தை பாருங்க'
ரேட்டிங்(3 / 5)
கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான சிந்துநதி பூ படத்தில் அறிமுகமாகி, சேரன் இயக்கத்தில் வெளியான பாரதி கண்ணம்மா உட்பட பல்வேறு படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் ரஞ்சித். கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு 'சமூகம் சார்ந்த விஷயத்தை பேசியதற்காக நெட்டிசன்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டார் ரஞ்சித். தற்போது இந்த விமர்சனங்களை கடந்து 'இறுதி முயற்சி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வரவுள்ளது. இனி இறுதி முயற்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
கோவை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருபவர் ரவி (ரஞ்சித்) இவரது மனைவி வாணி (மொகாலி மீனாட்சி) இவர்களுக்கு ஒரு மகள், மகன் இருக்கிறார்கள். இவரது மகனுக்கு இருதயத்தில் உள்ள பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுகிறது. கோவிட் உடப்பட பல்வேறு காரணங்களால் ஜவுளி வியாபாரம் நஷ்டம் அடைகிறது. இந்த காரணங்களுக்காக ராஜப்பா என்ற வட்டி தொழில் செய்யும் தாதாவிடம் எண்பது லட்சம் வரை கடன் வாங்குகிறார் ரவி. இது வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியை சில மாதங்களில் எட்டுகிறது.
ராஜாப்பா சொன்ன நேரத்தில் பணத்தை ரவியால் தர முடியாததால் ராஜாப்பா ரவி வீட்டிற்கு வந்து ரவியின் மனைவி, மகளிடமும் ஆபாசமாக பேசுகிறார். அநாகரீகமாக நடந்து கொள்கிறார். அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். ரவி பல்வேறு நண்பர்களிடம் பண உதவி கேட்கிறார். நண்பர்கள் கையை விரித்து விடுகிறார்கள். வேறு வழியில்லாமல் ரவி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். இந்த தற்கொலை முயற்சி என்ன ஆனது என்று சொல்கிறது இந்த இறுதி முயற்சி.Irudhi Muyarchi Movie
இந்த படத்தில் உள்ள காட்சிகளை பார்க்கும் போது ஊடகங்களில் நாம் பார்த்த தமிழ்நாட்டில் கந்து வட்டி பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட நபர்கள் நினைவுக்கு வருகிறார்கள். வீட்டிற்குளேயே கணவன் - மனைவி இருவரின் உணர்ச்சிபூர்வமான பரிமாற்றங்கள், உரையாடல்கள் வழியே கதை நகர்கிறது. ஒரே வீட்டில் கதை நகர்ந்தாலும் கந்து வட்டியின் கோரமுகத்தை உணர வைத்து விடுகிறார் டைரக்டர் வெங்கட் ஜானி. உணவில் விஷத்தை கலந்து குழந்தைகளுக்கு தரும் காட்சியில் நமக்கு கண் கலங்கி விடுகிறது. எந்த வித கமர்சியல் சமரசங்களும் செய்து கொள்ளாமல் கந்து வட்டியால் குடும்பம் சிதைவதை ஒரு லைவ்வாக காட்டியுள்ளார் இயக்குநர். நாம் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கிறது.
ஒரு அம்மாவாக குழந்தைகளுக்கு விஷம் தர தவிக்கும் போதும், ரவுடிகளால் அவமானப்படுத்தப்படும் போதும் மெகாலி மீனாட்சி சிறப்பாக நடித்திருக்கிறார். இது வரை பல படங்களில் முரட்டுத்தனமான வில்லானாக நடித்த ரஞ்சித் இப்படத்தில் கடன் வாங்கி தவிக்கும் ஒரு குடும்ப தலைவனாக வாழ்ந்து காட்டியுள்ளார். கம் பேக் கில் தனக்கு தகுந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு ரஞ்சித்தை பாராட்டலாம். படத்தில் சில குறைகள் இருந்தாலும் சினிமாவில் அதிகம் பேசாத கந்து வட்டி பிரச்சனையை ஒரு சராசரி குடும்ப பின்னணியில் சொன்னதற்கு இறுதி முயற்சியை வரவேற்கலாம். தனி நபரிடம் இருந்து வட்டிக்கு கடன் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருந்தால் கடன் வாங்கும் முன் இப்படத்தை பாருங்கள்.