
தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ள இன்றைய காலகட்டத்தில், ஆன்லைனிலேயே அனைத்து சேவைகளும் கிடைக்கின்றன. இதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் ஆன்லைன் கடன். ஆன்லைன் செயலிகளில் கடன் வாங்கி விட்டு, அதனைச் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லல் படும் பொதுமக்கள் இங்கு ஏராளம்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் லோன் வாங்கியவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதோடு இதே காலகட்டத்தில் தான் ஆன்லைன் விளையாட்டுகளில் சிலர் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துள்ளனர். அரசு சார்பில் ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஆன்லைன் கடன் போன்றவை குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஆன்லைன் கடன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழில் திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.
ஆன்லைன் விளையாட்டு மற்றும் கடன் ஆகியவற்றின் விபரீதத்தை எடுத்துரைக்கும் படைப்பாக ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ என்ற புதிய திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. நிவாஸ் ஆதித்தன் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தை அபிஷேக் லெஸ்லி இயக்கியுள்ளார். தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய் ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்த அபிநய்க்கு தனுஷ் உதவி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் திரைக்கு திரும்பி உள்ளார் நடிகர் அபிநய். மேலும் இப்படத்தில் ஆத்விக் மற்றும் எஸ்தர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேம் ஆஃப் லோன்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி கூறுகையில், “ கொரோனா வைரஸ் பரவிய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் கடன் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் சிக்கி வாழ்க்கையை இழந்தனர். இது குறித்த செய்திகளை தினமும் நான் கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். இந்நிலையில் இதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு திரைப்படத்தை ஏன் எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் கேம் ஆஃப் லோன்ஸ் திரைப்படம்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் மூழ்கிய ஒருவன், அதிலிருந்து தப்பிக்க ஆன்லைனில் கடன் வாங்குகிறான். ஆன்லைன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், அதில் சிக்கிக் கொண்டு காலை முதல் இரவு வரை அவன் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை விளக்குகிறது இந்தத் திரைப்படம். ஒன்றரை மணி நேரத்தில் உருவான இத்திரைப்படம் விருதுக்காக உருவாக்கப்பட்டது அல்ல; விழிப்புணர்வுக்காக மட்டுமே.
ஜேஆர்ஜே புரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவானந்தம் அவர்கள் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஜோ கோஸ்டா இசையமைக்க, சபரியின் ஒளிப்பதிவில் ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வர இருக்கிறது” என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஆன்லைன் கடனில் சிக்கி பலரும் தற்கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர். இதனைத் தடுக்கும் வண்ணம் ஆன்லைன் கேம்ஸ் விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டின் விபரீதத்தை எடுத்துரைக்கும் கேம் ஆஃப் லோன்ஸ் திரைப்படம் பொதுமக்களுக்கு நல்ல விழிப்புணர்வு திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.