
மாநகரம், இறுகப்பற்று பட நடிகர் ஸ்ரீ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "may I come in?" என்ற தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்டுள்ளார்.
கனா காணும் காலங்கள் மூலம் தனது கெரியரை தொடங்கிய நடிகர் ஸ்ரீ படிப்படியாக முன்னேறி ரசிகர்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருந்தார். ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ என இவர் நடித்த அத்தனை படங்களும் ரசிகர்களின் பேவரைட் தான். இப்படி இருக்கையில் இவரின் சமீபத்திய புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களை அதிர்ச்சியும், கவலையடையவும் செய்தன.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் மெலிந்த நிலையில், தலை முடியை கலர் செய்து ஆபாச வீடியோக்கள், பாட்டு என அவரின் இயல்பு நிலையை மறந்து இணையத்தில் வீடியோவை பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இவருக்கு என்னாச்சு என கேட்டு வருகின்றனர்.
பலரும் இவர் போதைக்கு அடிமையாகிவிட்டதாகவும் கூறுகின்றனர். மேலும் பலர் இவருக்கு இறுகப்பற்று படத்தில் சம்பள பாக்கி இருந்ததால் தான் மன அழுத்தத்தில் இப்படி ஆகிவிட்டதாக கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மை என்ன என்பது சரியாக தெரியாமல் இருந்தது.
தொடர்ச்சியாக இணையத்தில் இது தொடர்பான பேச்சுக்கள் எழுந்து வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை மீட்டதாக தகவல் வெளியாகியது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களும் நீக்கப்பட்டது. அதன் பிறகு அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக ஸ்ரீ குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் ஒரு புதிய நாவல் எழுதியுள்ளதாகவும், ‘மே ஐ கம் இன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த நாவலை அமேசான் கிண்டில் தளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மிக மோசமான நிலையில் இருந்த அவர் தற்போது பழையபடி மீண்டு வந்திருப்பது குறித்து நெட்டிசன்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்