படத்தை தயாரிப்பது எளிதா? ரிலீஸ் செய்வது எளிதா?

Movie Release
Movie Release
Published on

திரைப்பட உலகில் ஒரு படத்தை தயாரிக்க கோடிக்கணக்கில் செலவாகிறது. ஆனால், இதில் சில படங்கள் மட்டுமே நல்ல இலாபத்தைக் கொடுக்கின்றன. படங்களைத் தயாரிப்பதும், ரிலீஸ் செய்வதும் இன்றைய நிலையில் எளிதானதா அல்லது சவால் நிறைந்ததா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.

சினிமா துறையில் ஒவ்வொரு மொழியிலும் வாரந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு படங்களாவது திரைக்கு வருகின்றன. படத்தை தயாரிப்பதிலும், அதனை வெளியிடுவதிலும் தயாரிப்பாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். நடிகர்களும், நடிகைகளும் படத்தில் நடித்துக் கொடுத்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு, அடுத்தடுத்த படங்களில் நடிக்க கிளம்பி விடுகின்றனர். ஆனால், அப்படம் திரைக்கு வருவதற்கு பலரது கடின உழைப்பு தேவைப்படுகிறது.

ஒரு இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதையை சொல்லி சம்மதம் வாங்கிய பிறகு, அப்படத்தின் தொடக்க விழாவில் இருந்து திரைக்கு வரும் வரை ஆகின்ற செலவுகள் எக்கச்சக்கம். இதில் ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்து விட்டோம்; இனி வெளியீடு மட்டும் தான் என தயாரிப்பாளர் நிம்மதி பெருமூச்சு விட்டால், பிரச்சினையே இனி தான் ஆரம்பமாகிறது. ஆம், ஒரு திரைப்படத்தை வெளியிடுவதில் தான் எத்தனை சவால்கள் காத்திருக்கின்றன.

நாம் எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்குமா என்று கடைசி வரை பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டால், வசூலில் அது பாதிப்பை ஏற்படுத்தி விடும் அல்லவா! அப்படியே கணிசமான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைத்தாலும், அதே நாளில் அல்லது அடுத்த வாரத்தில் பெரிய நடிகர்களின் படம் திரைக்கு வந்தால், இந்தப் படத்திற்கான தியேட்டர் எண்ணிக்கை குறைந்து விடும் அபாயம் உள்ளது. அதிலும் சிறு பட்ஜெட் படம் என்றால் சொல்லவே வேண்டாம்; கணக்கிற்காக சில தியேட்டர்களை ஒதுக்குவார்கள். படம் நன்றாக இருந்தாலும் கூட சில படங்கள் மட்டுமே முத்திரைப் பதிக்கின்றன.

பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு செல்வாக்கு இருப்பதால், இவர்களின் படங்களுக்கு அதிகளவிலான தியேட்டர்கள் கிடைத்து விடுகின்றன. ஆனால் இதில் கடுமையாக பாதிக்கப்படுவது சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தான். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் தான், சிறு பட்ஜெட் படங்கள் ஓரளவு இலாபத்தைப் பெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
சிறு பட்ஜெட் படங்களைக் காப்பாற்றுமா ஓடிடி பிளஸ்?
Movie Release

கடனை வாங்கியாவது படத்தை எடுத்து விடலாம். ஆனால், அதனை திரையிட்டு இலாபம் காண்பது என்பது இன்றைய நிலையில் சவாலான ஒன்றாகும். ரிலீஸ் செய்ய முடியாமல் பல பிரச்சினைகளால் இன்றும் பல படங்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றன.

சமீபத்தில் கூட இயக்குநர் சரண்ராஜ் தனது குப்பன் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில் “படம் தயாரிப்பது எளிது; ஆனால் அதனை ரிலீஸ் செய்வது கடினம்; இதை விடக் கடினம் பொதுமக்களை தியேட்டருக்கு கொண்டு வருவது” என்றார். ஒரு படம் பல சவால்களைக் கடந்து திரைக்கு வந்து விட்டால் கூட அதனை ரசிக்க மக்கள் திரைக்கு வர வேண்டுமல்லவா! ஒரு படம் சிறந்ததா இல்லையா என்பதை மக்கள் தானே அங்கீகரிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com