பிரபல நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கானுடன் சாய் பல்லவி ஜோடி சேரவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
நடிகை சாய்பல்லவி ப்ரேமம் படத்தின்மூலம் தென்னிந்திய ரசிகர்களின் பேராதரவை பெற்றார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் நடிக்க அவருக்கு பல வாய்ப்புகள் வந்தன. தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகி ரசிகர்களின் அன்பை பெற்றார். மேலும் இன்றுவரை அதிகம் மேக்கப் போடாமலும், எந்த விழாக்களுக்கு சென்றாலும் புடவை அணிந்தும் தனது சிம்பிளிசிட்டியை வெளிப்படுத்தி வருகிறார். இந்தத் தனித்துவமே அவரின் ரசிகர்கள் பட்டாளத்திற்கு காரணமாயிற்று.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் படத்திற்கு பின்னால், இன்னும் பல படி முன்னேறி சென்றிருக்கிறார் என்றே கூற வேண்டும். ஒட்டுமொத்த இந்தியர்களின் அன்பைப் பெற்றுவிட்டார்.
இதற்கிடையே இவர் பான் இந்திய படமான ராமாயணம் படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படித் தொடர்ந்து படங்களில் கம்மிட்டாகி பிஸியாக உள்ளார். கோலிவுட், பாலிவுட் என தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்.
இப்படியான நிலையில், சாய் பல்லவி அமீர் கான் மகன் ஜுனைத் கானுடன் ஜோடி சேரவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இவர் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான மகாராஜ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகளான குஷி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லவ்யப்பா எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்துதான் ஜுனைத் கான் சாய் பல்லவியுடன் ஜோடி சேரவுள்ளார். இப்படத்தை அமீர்கான் தயாரிக்க, சுனில் பாண்டே இயக்க உள்ளார். இதன்மூலம் பாலிவுட்டில் தொடர்ந்து படங்களைக் கொடுத்து பான் இந்தியா நாயகியாக வலம் வருவார் என்பது தெரிகிறது.
இப்படி பாலிவுட் கோலிவுட் என பிஸியாக இருக்கும் சாய் பல்லவியின் மேல் தொடர்ந்து புரளிகளும் வருகின்றன. இதனை குறித்து அவர் பலமுறை எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எதுவும் உறுதியாக சொல்ல முடியாது என்பதே உண்மை.