நேற்று அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அதைவிடவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் ஒரு பெரிய அப்டேட் வெளியானது. 'இது லிஸ்ட்லையே இல்லையே பா' என்ற அளவிற்கு அஜித்தின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் அஜித்தின் அடுத்தப் படத்திற்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித்தின் நீண்டக் கால நண்பர் வில்லனாக நடிக்கப்போகிறார் என்றச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகிவிடும். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அஜித் நடிக்கப்போகும் அடுத்தப் படத்திற்கான அப்டேட் வெளியானது.
அஜித் தனது 63வது படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கைக்கோர்க்கிறார். மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டுப் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் படக்குழுத் தெரிவித்துள்ளது.
இயக்குனர் ஆதிக் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்திற்குப் பிறகுத் தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். இந்தநிலையில் அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று வசூலை ஈட்டியதால், அவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. ஆகையால் ஆதிக் அஜித் வைத்து எடுக்கப்போகும் இந்தப் படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவையே வில்லனாக நடிக்க அழைப்புவிடுத்திருக்கிறார் என்றுக் கூறப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா சினிமா துறையில் இயக்குனராக அறிமுகமாகும்போது முதன்முதலில் அஜித் வைத்துதான் படம் எடுத்தார். சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்னர் வாலி என்றப் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் எஸ்.ஜே.சூர்யா. ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் அஜித்திற்குப் பார்த்துப் பார்த்து வைத்து வாலி படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் மூலமே இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். இப்போது மீண்டும் இவர்கள் இணையவுள்ளது ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் தள்ளியுள்ளது.
மேலும் விடாமுயற்சி பட வேலைகளில் அஜித் பிஸியாக உள்ளதால் அவர் இல்லாமலேயே குட் பேட் அக்லி படத்தின் பூஜை முடிந்துவிட்டது. குட் பேட் அக்லி படத்தை இயக்குனர் ஒரு பான் இந்தியா படமாகவும் ஆக்ஷன் நிறைந்த படமாகவும் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் ஜப்பானில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.