தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துள்ள வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அதன் தலைவர் ஐசரி கே. கணேஷ் தலைமையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் (2025-2027) 10 பிரம்மாண்ட படங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
"கோமாளி", "எல்.கே.ஜி", "மூக்குத்தி அம்மன்", "வெந்து தணிந்தது காடு" போன்ற வெற்றிப் படங்களை தயாரித்து தனது முத்திரையை பதித்த வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தற்போது வணிகரீதியான வெற்றிப் படங்கள், சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள் மற்றும் ஹை-கான்செப்ட் படங்கள் என பன்முகத்தன்மை கொண்ட திரைப்படங்களை தயாரிக்க தயாராகி வருகிறது.
இந்த 10 படங்களில், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களான சுந்தர் சி, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், '96' படப்புகழ் பிரேம்குமார், மலையாளத்தின் '2018 - Everyone Is A Hero' இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப், 'கனா' இயக்குநர் அருண்ராஜா காமராஜ், 'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா, 'கட்டா குஸ்தி' இயக்குநர் செல்லா அய்யாவு, மற்றும் 'டாடா' இயக்குநர் கணேஷ் கே. பாபு என 10 இயக்குநர்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் படங்களில் தனுஷ், நயன்தாரா, ரவி மோகன் மற்றும் விஷ்ணு விஷால் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர். வி.ஜே. சித்து இயக்குனராக அறிமுகமாகும் படமும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது, புதிய திறமைகளை ஊக்குவிக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் காட்டுகிறது.
இது குறித்து ஐசரி கே. கணேஷ் கூறுகையில், "இந்த திரைப்பட வரிசை எங்களின் அடுத்த அத்தியாயத்தைக் குறிக்கிறது. வலிமையான மற்றும் ஆழமான கதைகள் கொண்ட மிகப்பெரிய வரிசையாகும். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இப்படங்கள் பல தளங்களிலும், பல மொழிகளிலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்" என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு, தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஒரு முழுமையான ஸ்டுடியோவாக வளர்ச்சி பெற்று வருவது, திரைத்துறையில் புதிய வாய்ப்புகளையும் தரமான படைப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.