
புத்தகம் என்பது நம்முடைய வாழ்க்கையின் வழிகாட்டி. "ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்கு சமம்!" புத்தகங்கள் நம்முடைய அறிவை வளர்க்கும். அதுமட்டுமின்றி, நமது சிந்திக்கும் திறமையை அதிகமாகிறது. வாழ்க்கையைப் பற்றிய புரிதலைவும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வதற்கான வழியையும் காட்டுகிறது. இந்தக் பகுதியில், ஒரு புத்தகத்தை எளிமையாக, பயனுள்ளதாக வாசிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
வாசிக்கத் தொடங்கணும்... ஆனால் எப்படி?
ஒரு புத்தகத்தை எப்படிப் படிக்க தொடங்க வேண்டும், என்பதை பற்றின தெளிவான வழிகாட்டுதல் யாருக்கும் கிடைப்பதில்லை. பலருக்கு புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், ஆனால் அதை எப்படித் வாசிக்க தொடங்கணும் என்பது தெரியாமல் பாதியில் விட்டுவிடுகிறார்கள். அதற்கான காரணம், அவர்கள் சரியான முறையில் வாசிக்கவில்லை என்ற எண்ணமாக இருக்கலாம் .
வாசிப்பதற்கான நோக்கம்: மனதுக்குள் ஒரு கேள்வி
முதலில் புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது, நாம் அதை எதற்காக வாசிக்கிறோம், என்பதை நம் மனதில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவைப் பெருக்கவேண்டுமா? ஒரு சமூகப் பிரச்சனையைப் புரிந்துகொள்ளவா? இல்லை ஒரு கதை அனுபவத்தின் மூலம் மனச்சோர்விலிருந்து வெளியே வரவா? எந்த நோக்கத்திற்காக வாசிக்கிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நோக்கம் நமக்கு தெளிவாக இருப்பது நல்லது. புத்தகத்தை சும்மா படிக்கலாமே என்று எடுத்தால், அது விரைவில் சலிப்பை ஏற்படுத்தும்.
மனதிலிருந்த கவலையை அகற்றுங்கள்
தவறான எண்ணங்களை விட்டுவிட வேண்டும். "எனக்கு புத்தகம் பிடிக்காது", "நான் எதற்காக படிக்க வேண்டும் ?" போன்ற எண்ணங்கள் வாசிப்பதற்கான தடைகளாக இருக்கின்றன. வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், இதனை எல்லாம் தவிர்த்து விடுங்கள் . ஒரு நல்ல எண்ணத்துடன், நல்ல நம்பிக்கையுடன் நாம் வாசிக்கத் தொடங்கினால், எளிதில் அதில் ஆர்வம் வந்துவிடும்.
எளிய நூல்களோடு ஒரு பெரிய பயணம்
புத்தகத்தை எப்போதும் பெரியதாக, சிக்கலானதாக தேர்வு செய்ய வேண்டியதில்லை. சிறியதொரு கதை, கட்டுரை தொகுப்பு, மனநலம் சார்ந்த புத்தகம், குழந்தைகளுக்கான நூல்கள் போன்ற எளிய நூல்களுடன் ஆரம்பிக்கலாம். இந்த வகை தொடக்கங்கள் நம்மை வாசிப்பின் உலகுக்குள் மெதுவாக அழைத்துச் சென்று, சிறிது சிறிதாகப் பெரிய நூல்களை எளிதாக படிக்கத் தயாராக்கும்.
உங்கள் நேரத்தின் சிறந்த பகுதி
வாசிப்பதற்காக தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒதுக்கினால் போதும். அது காலையில் இருக்கலாம், இல்லையெனில் இரவு தூங்கும் முன்பாக இருக்கலாம். முக்கியமானது, அந்த நேரத்தில், மற்ற செயல்களை தவிர்க்க வேண்டும். ஒரு தடவை புத்தகம் படிக்கும் பழக்கம் உருவானால், அது தினசரி ஒரு நல்ல பழக்கமாக மாறும்.
அமைதி தரும் இடம்
அமைதியான சூழ்நிலையில் வாசிப்பது மிக முக்கியம். போன் சத்தம், டிவி சத்தம், வியாபாரிகளின் சத்தம் ஆகியவை கவனத்தைச் சிதறடிக்கும். இதனை தவிர்க்க அமைதியான இடம், மெதுவான ஒளி, நெஞ்சுக்கு நெருக்கமான புத்தகம் ஆகிய மூன்றும் இருந்தால் வாசிப்பு நேரம் சுத்தமான ஆனந்தமாக மாறும்.
வார்த்தைகளை முன்னிலைப் படுத்துங்கள்
வாசிக்கும்போது முக்கியமான வரிகளை அல்லது வார்த்தைகளை குறித்துக் கொள்ளலாம். அது நம் மனதில் பிடித்தமான வரிகளாக இருக்கலாம். அல்லது ஒரு கதாபாத்திரம் கூறிய பதிலாகவும் அல்லது கருத்தாகவும் இருக்கலாம்.
கதாபாத்திரம் ஏன் இப்படிச் செய்தான்? இந்த நிகழ்வு நமக்கு ஏதேனும் சொல்ல வந்ததா? இதுபோன்ற கேள்விகளை நாம் மனதுக்குள் எழுப்பும்போது, வாசிப்பு ஒரு சூழ்நிலையை பலவிதமாக யோசிக்க கற்றுத் தருகிறது .
வாசித்த பிறகு உங்கள் வரிகள்
புத்தகம் வாசித்து முடிந்த பிறகு அதை மூடியே வைக்காமல், வாசித்ததை ஒரு பக்கத்தில் சுருக்கமாக எழுதி வைப்பது நல்லது . அந்த சுருக்கம் மூலம் நீங்கள் என்ன கற்றுக் கொண்டடிர்கள் என்பது உங்களுக்கு தெரிய வரும்.
கருத்து வெளிவருதல்
புத்தகத்தை வாசித்து முடித்த பிறகு, நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வது நல்லது . ஒரே புத்தகத்தை பலர் வாசிக்கும்போது, ஒவ்வொருவரின் கருத்துக்களும் வெளிவரும் அதனால் உங்கள் சிந்திக்கும் திறன் மேம்படும்.
எந்த ஒரு புத்தகமாக இருந்தாலும் சரி வாசிப்பதற்கு முன்பு அதனுடைய தலைப்பு மற்றும் முகப்பை படித்த பிறகு புத்தகத்தின் உள்ளே செல்லவும்.
அதுபோல மொபைல்களை பயன்படுத்தி புத்தகங்களை வாசிப்பதை தவிர்க்கவும் அது உங்களுக்கு கவன சிதறலை ஏற்படுத்தும்.
ஒரு புத்தகத்தை வாசிக்க துவங்குவதை விட முக்கியமானது அதை முடிக்கத் துணிவது. தொடங்கும் முன் பெரிதாக யோசிக்க வேண்டாம். ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினால், அது நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த பயணமாக மாறும்.