

குழந்தைகளை பயமுறுத்தி, அவர்களை விரட்டி விரட்டி ருசிக்கும் ஒரு கோமாளியை திரையில் பார்த்திருப்போம். ஸ்டீபன் கிங் (Stephen King) உருவாக்கிய கதாபாத்திரங்களிலேயே மிக பயங்கரமான ஒன்றுதான் இந்த 'பென்னிவைஸ்' (Pennywise). சிவப்பு பலூனை கையில் வைத்துக்கொண்டு சிரிக்கும் இந்த கோமாளி உண்மையில் யார்? ஜாக்கி சான் படத்தில் வரும் 'ஷிண்டு' கதாபாத்திரத்தை போல, இது ஆம்பளையா பொம்பளையா என தெரியாத ஒரு குழப்பமான உருவம் தான் இந்த பென்னிவைஸ்.
விசித்திரமான பூர்வீகம்: நாம் நினைப்பது போல பென்னிவைஸ் இந்த பூமியைச் சேர்ந்தவன் கிடையாது. ஏன், நம் அண்டத்தை சேர்ந்தவன் கூட கிடையாது. ஸ்டீபன் கிங் இதற்கென தனியாக 'மேக்ரோவர்ஸ்' (Macroverse) என்ற ஒரு தனி உலகத்தையே உருவாக்கியுள்ளார். பல கோடி ஆண்டுகளுக்கு முன், அந்த அண்டத்தில் 'மேட்ரின்' (Maturin) என்ற ஒரு பிரம்மாண்டமான ஆமை இருந்தது. அந்த ஆமைக்கு ஒருமுறை வயிறு வலிக்க, அது எடுத்த வாந்தியில் தான் நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் நம் பூமி உருவானதாக இந்த கதை சொல்கிறது.
அதே சமயம், அந்த ஆமைக்கு இணையான சக்தியுடன், இன்னொரு தீய சக்தியும் உருவானது. அதுதான் 'இட்' (It) அல்லது டெட்லைட்ஸ் (Deadlights). விண்கல் போல பூமிக்கு வந்து விழுந்த இந்த சக்தி, பல லட்சம் ஆண்டுகளாக பூமிக்கடியில், அதாவது டெர்ரி (Derry) என்ற நகருக்கு அடியில் பதுங்கி இருந்தது.
உருவம் மற்றும் உணவு முறை: பென்னிவைஸின் உண்மையான உருவம் கோமாளி கிடையாது. அதன் உண்மையான வடிவம் 'டெட்லைட்ஸ்' எனப்படும் மூன்று ஒளிரும் ஆரஞ்சு நிற விளக்குகள் தான். மனித மூளையால் அதன் உண்மையான வடிவத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்பதால், அது சிலந்தி போன்றோ அல்லது கோமாளி போன்றோ நம் கண்ணுக்குத் தெரிகிறது.
இது 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூக்கத்தில் இருந்து விழிக்கும். விழித்தவுடன் பசி தீர்க்க வேட்டையாடும். மீண்டும் தூங்கச் செல்லும். பெரியவர்களை விட குழந்தைகளை பயமுறுத்துவது சுலபம் என்பதாலேயே இது குழந்தைகளை குறிவைக்கிறது. எப்படி நாம் சாப்பாட்டில் உப்பு சேர்த்து ருசிப்போமோ, அதேபோல பயம் என்பது இந்த அசுரனுக்கு உப்பு மாதிரி. பயத்தோடு இருக்கும் சதையைச் சாப்பிடுவது தான் அதற்கு பிடிக்கும்.
சக்திகள்: பென்னிவைஸ் ஒரு சாதாரண பேய் அல்ல, அது ஒரு அசுரன். இதனால் வடிவத்தை மாற்றிக்கொள்ள முடியும், இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்ட முடியும், மற்றும் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும். டெர்ரி நகரத்திற்குள் நடக்கும் அனைத்தையும் அதனால் கட்டுப்படுத்த முடியும்.
பலவீனம்: எவ்வளவு பெரிய அசுரனாக இருந்தாலும் அதற்கு ஒரு பலவீனம் இருக்கும். பென்னிவைஸின் மிகப்பெரிய ஆயுதம் 'பயம்'. அதேசமயம் அதன் மிகப்பெரிய பலவீனம் 'தைரியம்'. நீங்கள் அதைப் பார்த்து பயப்படுவதை நிறுத்திவிட்டாலே, அதன் சக்தி குறைந்துவிடும். இது வெறும் மனோதிடம் சார்ந்த போர்.
"ரிச்சுவல் ஆஃப் சட்" (Ritual of Chüd) என்ற முறையின் மூலம், மனரீதியாக அதை எதிர்த்து நின்றால், அந்த டெட்லைட்ஸை சிறைபிடிக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், நம் மனதில் தைரியம் இருந்தால், அந்த கோமாளி வெறும் வேஷம் போட்ட பொம்மை தான். பயந்தால் மட்டுமே அது அரக்கன். எனவே, பயத்தை வெல்வதே பென்னிவைஸை வெல்வதற்கான ஒரே வழி.