
இயக்குநர் மணிரத்னம் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த படம் வரும் ஜூன் 5-ம்தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24-ம் தேதி சென்னையில் நடந்தது. இதில் பேசிய கமல்ஹாசன், "தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக" கூறினார். நடிகா் கமல்ஹாசன் கன்னடம் குறித்து பேசிய பேச்சு, கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசனுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுவரை மவுனம் காத்து வந்த நடிகர் சிவராஜ் குமார் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். கன்னடம் மீது நடிகர் கமல்ஹாசனுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. பெங்களூரு குறித்து அவர் நல்ல விஷயங்களை சொல்கிறார். நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன்.
எனது தந்தையே பெரிய நடிகராக இருக்கும்போது வேறு ஒரு நடிகரை ஏன் ரசிக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். எனது தந்தை எனது குடும்பம். நான் கமல்ஹாசனால் ஈர்க்கப்பட்டேன்.
தான் என்ன சொன்னோம் என்பது அவருக்கு தெரியும். அவர் உரிய விளக்கம் அளிப்பார். மொழி விஷயங்கள் குறித்து செய்திகளை வெளியிடும் போது ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கன்னடம் மீதான அன்பு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இருக்கக்கூடாது. இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மொழி பற்றை வெளிப்படுத்தக்கூடாது.
மேலும் அவர் கூறும்போது, கமல்ஹாசன் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்துள்ளீர்கள்? மொழியின் மீதான காதல் எப்போதுமே இருக்கவேண்டும். சர்ச்சை எழும்போது மட்டும் குரல் எழுப்பாமல், எப்போதுமே கன்னட மொழியை ஊக்குவிக்க பழக வேண்டும், என்று குறிப்பிட்டு உள்ளார்.
கன்னட திரைத்துறையில் இளம் திறமையாளர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும். புதிதாக வருபவர்களை பற்றி யாரும் பேசுவது இல்லை. பெரிய நட்சத்திர சினிமாக்கள் குறித்து மட்டுமே பேசக்கூடாது. கன்னடத்திற்காக நான் உயிரையும் கொடுப்பேன் என்று கூறினார்.
கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் சிவராஜ் குமாரின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கன்னட அமைப்பினர், எழுத்தாளர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் தான் கூறிய கருத்திற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கன்னட சினிமா வர்த்தக சபைக்கு, அந்த மாநில மந்திரி சிவராஜ் தங்கடகி கடிதம் எழுதியுள்ளார். அதுபோல் கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் கர்நாடகா திரைப்பட சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகத்தில் அவர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தை திரையிட தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய கர்நாடகா திரைப்பட சம்மேளனத் தலைவர் நரசிம்மலு, நடிகர் கமல்ஹாசன் இன்று அல்லது நாளைக்குள் அவர் பொது மன்னிப்பு கேட்கவில்லை என்றால், எந்த சூழ்நிலையிலும் அவரது படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
இதனால் கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ வெளியாகுமா, வெளிவராத என்ற கவலை ரசிகர்கள் இடையே நிலவி வருகிறது.