
நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்' படம் கடந்த 2023-ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிறப்பு அம்சமாக ரஜினிகாந்துடன் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தது இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்ததுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனையும் படைத்தது. ‘ஜெயிலர்' வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. முந்தைய பாகம் போலவே இந்த படமும் தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தவிர்த்து வேறுசில முக்கிய கதாபாத்திரங்களையும் அப்படத்தில் இயக்குநர் நெல்சன் உருவாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் தோன்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை தற்போது வில்லனாக நடிப்பில் மிரட்டி வரும் எஸ்.ஜே.சூர்யாவும் படத்தில் இணைந்திருப்பது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டி இருக்கிறது.
இதற்கிடையில் படத்தில் இன்னொரு முக்கிய பிரபலம் இணைய உள்ளதாக சில நாட்களுக்கு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா (பாலைய்யா) இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப் போகிறாராம். முதல் பாகத்தில், ரஜினி - சிவராஜ்குமார் காட்சிகள் பேசப்பட்டது போல், இதில் ரஜினி - பாலகிருஷ்ணா காட்சிகள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலகிருஷ்ணா கதாபாத்திரம் குறித்த விவரங்கள் இன்னும் மறைக்கப்பட்ட நிலையில், நெல்சன் ஒரு சக்திவாய்ந்த, அதிரடியான கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார் என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தும். சமீபத்தில் பத்மபூஷண் விருது பெற்ற பாலகிருஷ்ணா, தமிழில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, சமீபத்தில் நடிகராக 50 ஆண்டுகளை நிறைவு செய்தார் என்பது கூடுதல் தகவல்.
இந்த படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடிக்க அவருடன் ரம்யாகிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சுரமுடு, பாலகிருஷ்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இது சன் பிக்சர்ஸ் கீழ் கலாநிதி மாறனால் தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தில் அனிரூத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஜெயிலர் 2 நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கும் அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும்.
ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிப்பதால் இந்த படத்தினை விரையில் திரையில் காண ரசிகர்கள் இப்போது ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.