

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் - 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஏற்கனவே பெரிய வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் 2ம் பாகம் தான் இந்த படம்.
இந்த திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் , ஜாக்கி ஷெராப், மிதுன் சக்கரவர்த்தி, ஹிருத்திக் ரோஷன் , மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, எஸ்ஜே.சூர்யா , யோகி பாபு , வித்யா பாலன் , மிர்னா, பூர்ணா, நோரா பதேகி உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திரங்கள் தோன்றுகின்றனர். ஏராளமான வெளி மாநில நடிகர் நடிகைகள் இந்த படத்தின் நடித்துள்ளதால் மற்ற மாநிலங்களிலும், ஜெயிலர் 2 விற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்த் நீண்ட காலமாக பான் இந்தியா சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவின் உச்ச மார்க்கெட்டை இந்த திரைப்படத்தின் மூலம் அடைய வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவின் முதல் ₹1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை அடையக்கூடிய வல்லமையும், தற்போதைக்கு அவரிடம் மட்டும்தான் உள்ளது , என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அல்ல போலேலோ , ஒன் சன் ஒன் மூன் , ஒன் நேம் ஆகிய பாடல்கள் முன்பே வெளியாகி ரஜினி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், ரஜினி திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும், இந்த முறை நடைபெறவில்லை என்று ரஜினி ரசிகர்கள் வருத்தத்துடன் உள்ளனர். ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் உரசல்கள் இருந்த நிலையில், முதல்வர் விஜய்யிடம் அனுமதி கேட்க வேண்டாம் என்று, ஆடியோ லான்ச் நடத்தவில்லை என்று சில தகவல்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன.
அனிருத் இசையுடன் அமர்க்களமாக ஜெயிலர் 2 டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரய்லரில் தனக்குரிய பாணியில் ஸ்டைலாக தோன்றுகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். டிரெய்லர் ஆரம்பமாகும் போது யார்ரா அவன்? அவன் யாரு? யாரு அவன் ? என்று தொடங்குகிறது. அப்போது தோன்றும் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்று அறிமுகமாகிறார். அடுத்த கட்சியில் நடிகர் ரஜினி எதுவும் அறியாத அப்பாவி போல, நகைச்சுவை நடிகரிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்.
அதற்கு அடுத்து வில்லன் எஸ்.ஜே.சூர்யாவும் வித்யா பாலனும் மிரட்டலாக தோன்றுகின்றனர். வித்யா பாலன் சிகரெட் புகைத்தபடியே ரஜினிகாந்தை மிரட்டுகிறார். அடுத்தடுத்த காட்சியில் ரஜினிகாந்த் , மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரின் அதிரடிகள் ஆரம்பமாகின்றது. இறுதிக் காட்சியில் ரஜினிகாந்த் ஒரு மிகப்பெரிய கட்டிடத்தை குண்டு வைத்து தகர்க்கிறார். அதன்பின்னர் நகைச்சுவையாக யோகி பாபு தோன்ற, ரஜினி ஒன்றும் தெரியாதவர் போல் தன் காரை துடைத்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் டிரெய்லர் நிறைவடைகிறது.