

நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துடன் நேரடியாக மோத உள்ளது சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம். விஜய் தற்போது அரசியல் குதித்து தீவிரமாக செயல்பட்டு வருவதால் , அவர் சினிமாவில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்து திரைக்கு வரவுள்ள ஜனநாயகன் திரைப்படம் தான், அவரது இறுதித் திரைப்படம் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தார்.
விஜய் தனது இறுதி திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாற்ற காத்திருக்கிறார். ஏனெனில், விஜயின் இறுதி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால் மட்டுமே, அவரது அரசியல் எதிர்காலத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜனநாயகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
விஜயின் அரசியலை முன்னிட்டு, அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களம் கொண்ட திரைப்படமாக இது உருவாக்கப் பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் கதை பாணியை பின்பற்றி , மக்களுக்காக போராடும் தலைவன் போன்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ் அதிகாரியாகவும் படத்தில் அவர் தோன்றுகிறார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த திட்டத்தை மாற்றி, ஜனவரி 9 அல்லது 10 ஆம் தேதி பராசக்தி திரைப்படத்தை வெளியீடு செய்ய உள்ளனர். பராசக்தி திரைப்படமும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. இந்த திரைப்படமும் அரசியல் நெடி கலந்ததாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஹிந்தி எதிர்ப்பு அரசியல் படத்தின் மையக்கருவாக இருக்கும் என்று குறியீடுகள் தெரிகின்றன. சிவ கார்த்திகேயன், ரவி மோகன் , அதர்வா , ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்தை சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தற்போது ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரு படங்களின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. பராசக்தி திரைப்படத்தின் இறுதிக் கட்டப்பணிகளும் பரபரப்பாக நடைபெறுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டு திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வருவதால் , தியேட்டர்கள் கிடைப்பதில் கட்டாயம் சிக்கல்கள் இருக்கும் , விஜய் போன்றே சிவ கார்த்திகேயனும் முன்னணி நடிகர் என்பதாலும், மேலும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்திற்கே தியேட்டர்கள் அதிக முன்னுரிமை கொடுக்கும் என்பதாலும் தமிழ் சினிமா பரபரப்பாகிறது.
ஜனநாயகன் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பெரும்பாலும் சன் டிவி தான் விஜயின் திரைப்படங்களை வாங்கும் , விஜய் அரசியலில் இருப்பதால் அந்நிறுவனம் தவிர்த்து விட்டது. பின்னர் விஜய் டிவி மற்றும் ஜீ டிவிக்கு இடையே போட்டி நடந்ததில் இறுதியில் ஜீ டிவி வென்றுள்ளது. சேட்டிலைட் உரிமையின் மதிப்பு ₹64 கோடி இருக்கலாம் என்று அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.