

உள்ளங்கை நெல்லிக்கனி என்னும் சொல் தொடர் மிகவும் பிரசித்தமானது. நெல்லிக்காயினால் (amla health benefits) மனித சமூகத்திற்கு எத்தனை விதமான நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பொதுவாகத் தெரிந்ததே. அதனைப் பற்றிய சிறப்பம்சங்களை இப்பதிவில் காண்போம்.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஆயுர்வேத சாஸ்திரத்தில் நெல்லிக்காயை மிகவும் புகழ்ந்து சொல்லி இருக்கிறார்கள். இதை ஒரு ரசாயனம் என்று சொல்கிறார்கள். எந்த வஸ்து எக்காலத்திலும், எந்த உருவத்திலும், எல்லோருக்கும் உபயோகம் உள்ளதாக இருக்கிறதோ, எது சரீரத்தின் ஓரங்கத்திற்கும் புத்துயிர் தருகிறதோ, எது எல்லா வியாதிகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்திருக்கின்றதோ, எது ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரக்கூடியதோ அதை ரசாயனம் என்கிறார்கள். இந்த எல்லா குணங்களும் பொருந்தியது நெல்லிக்காய். ஆகையால் இதை ரசாயனம் என்று சொன்னால் மிகையாகாது.
இந்திய பெண்மணிகள் நெல்லிக்காயை ஜக வசியத்தின் சின்னம் என்றும், ஆரோக்கியத்தின் சௌபாக்கியவதி என்றும் கருதி கார்த்திகை மாதத்தில் வரும் உத்தான துவாதசி அன்று நெல்லிக்கிளைகளை துளசி கன்றுடன் வைத்து பூஜிக்கின்றார்கள். சரீரத்தை பலப்படுத்தும் ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன.
இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு வாயுவையும், துவர்ப்பும், கைப்பும் கபத்தையும் போக்கக்கூடியவை. வாத பித்த கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் போக்கக்கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால் இது மிகவும் சிறந்தது. ஆயுர்வேத வைத்தியத்துக்கு இது மிகவும் ஏற்றது. இதில் ஏ, பி, சி ஆகிய மூன்று வைட்டமின்கள் இருக்கின்றன. சாத்துக்குடி ரசத்தில் இருப்பதை போல் 20 மடங்கு சி வைட்டமின் இதில் இருக்கிறது. மற்ற காய்கறிகளைப் போல் இல்லாமல் நெல்லிக்காய் வாடினாலும் வைட்டமின் குன்றுவதில்லை. இது இதன் தனிப்பட்ட குணமாகும்.
ஆரோக்கியமாகவும், நோயற்று வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் தினசரி 50 மில்லி கிராம் வைட்டமின் தேவை. இதற்கு 4 அவுன்ஸ் சாத்துக்குடி பழ ரசமோ, தக்காளிப் பழ ரசமோ சாப்பிட வேண்டும். ஆனால் இந்த 50 மில்லி கிராம் சி வைட்டமினும் அரை அவுன்ஸ் நெல்லிக்காய் ரசத்தில் கிடைக்கிறது. மேலும் இது சாத்துக்குடி, தக்காளிப் பழங்களை காட்டிலும் மலிவானதும், உலர்ந்த நெல்லிமுள்ளியை விட பச்சை நெல்லிக்காயை உபயோகிப்பது நல்லது.
சில சமயம் சரீரத்தில் ஏற்படும் காயங்கள் ஆறாமல் நாளடைவில் அழுகி விடும். அப்பொழுது நெல்லிக்காயை அரைத்து உருண்டையாக உருட்டி உலர வைத்து அந்த மாத்திரையை சாப்பிட்டால் நன்றாக குணமாகிவிடும். இது புழு பூச்சிகளை நீக்கும் சக்தி வாய்ந்தது.
பல்லில் ஏற்படும் பயோரியா எனப்படும் வியாதிக்கு மிகவும் நல்லது. அடுத்து நெல்லி இலையின் சாற்றை கொப்பளித்து நெல்லிக்காயை உட்கொண்டால் இந்த வியாதி சீக்கிரம் குணமாகிவிடும். குழந்தைகளுக்கு கோணலாக முளைத்த பற்களும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் மிகச்சிறந்தது.
கர்ப்பிணிகள் முதலிலிருந்து ஒன்பது மாதம் வரையில் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு நெல்லிக்காய் அல்லது அந்த அளவு நெல்லி முள்ளி உட்கொண்டால் அந்த சமயத்தில் ஏற்படும் வாந்தி நின்று நன்றாக பசி எடுக்கும். நெல்லிக்காய் சாப்பிடுவதனால் இரும்பும், சுண்ணாம்பும் சரீரத்திற்கு சேர்ந்து கர்ப்பிணிகள் ஆரோக்கியம் உள்ளவர்கள் ஆகிறார்கள். இரத்த விருத்தியும் ஏற்படுகிறது. தவிர கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கும் நல்ல புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது .
ஒரு பெரிய நெல்லிக்காயானது முட்டையை விட அதிக சக்தி கொடுக்கும் தன்மை வாய்ந்தது. இவ்வாறே குழந்தைகளின் ஆகாரத்திலும் நெல்லிக்காய் சேர்த்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் அனேக விதமான நோய்கள் கிட்டவே நெருங்க முடியாது. சரீரத்தின் ஒவ்வொரு அங்கமும் வளர்ச்சி அடைகிறது. ஆகையால் குழந்தை ஆயுள் முழுவதும் பலசாலியாகவும், ஆரோக்கியம் உள்ளதாகவும் இருக்கிறது .
மாணவருக்கு நெல்லிக்காய் மிகவும் முக்கியமானது. அவர்கள் ஞாபக சக்தி அதிகரித்து கண் பார்வையை தெளிவாக்குகிறது. சரீரத்தை நெல்லிக்காய் ஆரோக்கியம் உள்ளதாக்குவதுடன் புத்தி கூர்மையையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு பயன் தரும் நெல்லிக்காயை தினசரி உணவில் சேர்த்து ஆரோக்கியம் காப்போம்.