

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது நடிப்பை நிறுத்தி விட்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் அவரது திரையுலக பயணத்தில் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ , பிரியாமணி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’, ‘செல்ல மகளே’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி 9-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் வாங்கியுள்ள நிலையில் OTT உரிமத்தை அமேசான் பிரைம் சுமார் 150 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் முன்னோடியாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள 80 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் எஸ்.பி.பி.சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, திப்பு உள்ளிட்ட பல பின்னணி பாடகர்கள் பங்கேற்று பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு அம்சமாக விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், விஜய் நடித்த படங்களின் பாடல்களை இதர பாடகர் - பாடகிகளுடன் இணைந்து பாடி அசத்தினார்.
இந்த நிகழ்ச்கியில் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், ‘ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, நரேன், நாசர், பிரியாமணி மற்றும் இசையமைப்பாளர் அனிருத், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விஜய்யின் இசை நிகழ்ச்சி மலேசியாவில் நடந்ததால் அதை பார்க்க முடியாமல் தமிழகத்தில் அவரது ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியை சன் டிவி போன்ற ஏதாவது பெரிய சேனலும், யூடியூப் சேனலும் ஒளிபரப்பும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்தனர்.
இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளதாகவும், வரும் ஜனவரி 3 அல்லது 4ம் தேதிகளில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் தளபதியின் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.