

நடிகர் விஜய் நடிப்பில் வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய்க்கு, இதுதான் கடைசி திரைப்படம். ஆகையால் தான் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜனநாயகனுக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுக்கு போதிய அளவில தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுதவிர ஜனவரி 23 ஆம் தேதி நடிகர் அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் காரணமாக ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறைய அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக, கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் தற்போது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஜய், பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க இதுவரை 2 பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தளபதி கச்சேரி பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஜனநாயகன் படப்பிடிப்பு தொடங்கிய போது, இப்படம் தெலுங்கில் நடிகர் பாலய்யா நடித்த பகவந்த் கேசரி திரைப்படத்தின் மறு ஆக்கம் என பேசப்பட்டது. ஆனால் எதற்கும் பதிலளிக்காத படக்குழு, படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தியது. தீபாவளி பண்டிகைக்கே படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது ஜனநாயகன்.
இந்நிலையில் நாளை (டிசம்பர் 27) மலேசியாவின் கோலாலம்பூரில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. தளபதி கச்சேரியாக நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில், அரசியல் சார்ந்த எந்த விஷயமும் இடம் பெறக் கூடாது என மலேசிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஜனநாயகன் திரைப்படததை வட இந்தியாவில் வெளியிடும் உரிமையை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.
கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில், விஜய் மற்றும் பாபி தியோல் இருவரும் சண்டையிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த சண்டைக் காட்சியில் இருவருமே போலீஸ் கெட்டப்பில் இருப்பது, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்த போஸ்டரை பார்க்கும் போது, இந்தப் படம் பகவந்த் கேசரியின் ரீ-மேக் இல்லை என்பது தெளிவாகிறது. இந்நிலையில் இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து, இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த போஸ்டரை பார்க்கும் போது மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் - விஜய் சேதுபதி சண்டைக் காட்சியும், லியோ திரைப்படத்தில் விஜய் - சஞ்சய் தத் சண்டைக் காட்சியும் நினைவுக்கு வருகிறது.
படம் வெளியாவதற்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், அதற்குள் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் விஜய்யின் கடைசி படமாவது, தமிழ் சினிமாவில் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் முதல் படமாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்பபில் உள்ளனர்.