சம்பவம் செய்ய இருக்கும் ஜனநாயகன் டைட்டில் கார்ட் : செம குஷியில் ரசிகர்கள்..!

Jananayagan Title card Name
Vijay in JananayaganAI
Updated on

நீண்ட காலமாக தணிக்கை சான்றிதழ் பிரச்சனை காரணமாக ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. அந்த திரைப்படத்தின் நோக்கம் விஜயின் அரசியல் எதிர்காலத்தை தூக்கி பிடிப்பதை முக்கிய காரணமாக கொண்டிருந்தது. ஆனால், அந்தத் திரைப்படம் வெளியாகும் முன்னரே விஜயின் அரசியல் நோக்கம் நிறைவேறி விட்டது. அவர் அரசியலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்று விட்டார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் , ஜனநாயகன் திரைப்படத்தை முடித்ததும் முழு நேர அரசியல்வாதியாக இருப்பேன் என்று அறிவித்திருந்தார். இதனால், இவரது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் , பாபி தியோல் , பூஜா ஹெக்டே , மமீதா பைஜூ , கௌதம் மேனன் , பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். H.வினோத் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் , KVN தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

ஜனநாயகன் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் பொங்கல் வெளியீடாக, ஜனவரி 9 ஆம் தேதி வெளியிடுவதாக முதலில் அறிவித்திருந்தது. படத்தில் உள்ள பல்வேறு காட்சிகளுக்கு சென்சார் வாரியத்தினால் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகளை நீக்கினால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் வழங்க முடியும் என்று சென்சார் வாரியம் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. முதலில் படத்தின் காட்சிகளை நீக்க மறுத்த தயாரிப்பு நிறுவனம், தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்குமாறு நீதிமன்றத்தினை அணுகியது.

தொடர்ச்சியான நீதி போராட்டம் காரணமாக ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வராமல் சிக்கலை சந்தித்து வருகிறது. பின்னர் படத்திலிருந்த ஆட்சேபத்திற்கு உரிய சில காட்சிகளை நீக்குவதற்கு தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. காட்சிகளை நீக்கிய பின்னர் மீண்டும் சென்சார் வாரியத்தை தயாரிப்பு நிறுவனம் அணுகியது. ஆனால் , திரைப்படம் மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டது. இதனால் மீண்டும் மீண்டும் பட வெளியிட்டில் தாமதங்கள் தொடர்ந்தன.

இது போன்ற பாதிப்புகள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏராளமான சிக்கல்களை கொடுத்தது. படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனமும் , அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. தேர்தல் நெருங்கிய நேரத்தில் ஒரு சிலர் திருட்டுத்தனமாக ஜனநாயகன் திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட்டனர். தமிழ் திரையுலகில் இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. திரைப்படம் தியேட்டருக்கு வரும் முன்னரே வலைதளங்களில் வெளியானது, அதன் தயாரிப்பு நிறுவனத்தை பெரிய அளவில் பாதித்தது.

ஜனநாயகன் திரைப்பட சூழல்கள் இவ்வாறு இருந்தாலும் , தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். விஜயின் பதவியேற்பு விழாவில் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் கே.வி.வெங்கட் நாராயணனும் கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் " நாங்கள் இன்னும் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அது கிடைத்தவுடன் திரைப்படத்தை வெளியிடுவோம். இப்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், முதல்வரான விஜய் சாருக்கு எனது வாழ்த்துக்கள். ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது, அவர் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவார்" என்று கூறியிருந்தார்.

சமூக வலைதளங்களில் ஜனநாயகன் திரைப்பட டைட்டிலில் முதலமைச்சர் விஜய் என்று இடம்பெறும் என அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர். தயாரிப்பாளர் தரப்பும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு முதலமைச்சர் விஜய் என்ற டைட்டில், திரையரங்குகளில் வெளியாகும் பொழுது, நிச்சயம் பெரிய அளவில் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புகள் இருக்கும்!

இதையும் படியுங்கள்:
சட்டமன்றத்தை அதிரவைத்த விஜய்யின் முதல் உரை.! விஜய் மேஜிக் சட்டசபையிலும் தொடருமா?
Jananayagan Title card Name
logo
Kalki Online
kalkionline.com