

முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள 'சிக்மா ' திரைப்படத்திற்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அவர் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நேர்காணலில் சஞ்சய் தனது குடும்பத்தினை பற்றியும், தனது எதிர்கால துணை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்த நேர்காணலில் ஜேசன் சஞ்சய், முதல்வரின் மகன் என்ற எந்த ஒரு தற்பெருமையும் இல்லாமல் , தமிழ் சினிமாவின் உச்ச நடிகரின் மகன் என்ற கர்வமும் இல்லாமல், இயல்பாக பேசியது தமிழ் சினிமாவின் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. சஞ்சயின் நேர்காணலில் அவரிடமிருந்து ஏதேனும் எதிர்மறையான கருத்துக்கள் கிடைக்குமா? என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
தன்னுடைய வாழ்க்கையில் எதிர்காலத் துணை எப்படி இருக்க வேண்டும்? என்று சஞ்சய் கிரீன் பிளாக் மற்றும் ரெட் பிளாக் போன்ற விஷயங்களையும் பேசி உள்ளார். இப்போது வரைக்கும் தனக்கு காதலி இல்லை என்பதை திட்டவட்டமாக கூறிய அவர், காதலி மீது தனக்குள்ள எதிர்பார்ப்புகளையும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். " தனக்கு வரப்போகும் பெண் அட்வென்சர் மீது ஆர்வமாக இருக்க வேண்டும். புதுப்புது இடங்களுக்கு செல்வது , புதிதாக ஏதேனும் முயற்சி செய்து கொண்டே இருப்பது , அதை செயல்படுத்த நினைப்பது போன்ற எண்ணங்கள் கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பெண்ணைத்தான் தனக்கு பிடிக்கும்.
அந்தப் பெண் எப்பொழுதும் அவளது சொந்த காலில் இருக்க வேண்டும். அவள் பொருளாதார ரீதியாக தற்சார்பு நிலையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் அவருக்கு ஆதரவாக இருக்கலாமே தவிர அவளுக்கென்று சொந்த வருமானம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவளுக்கு கிரீன் பிளாக்(சம்மதம்)" என்று ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் "நம்மை ஒருவர் காதலிக்கிறார் என்பதற்காக, அவருக்காக நம்மை முழுமையாக மாற்றிக் கொள்ள முடியாது. ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். ஆனால், அதற்காக எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கக் கூடாது. ஒருவருடைய எல்லையை மற்றொருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் இல்லாவிட்டால் அந்த பெண்ணுக்கு பெரிய ரெட் பிளாக்(தடை) தான் என்று சஞ்சய் கூறியுள்ளார்.
தன் எதிர்காலத் துணை தனது பழக்கவழக்கங்களுக்கு ஒத்து போக வேண்டும், தனது கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணங்களை சஞ்சய் கொண்டுள்ளார். தன் எதிர்கால காதலிக்கு , முக்கியமாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும் . தமிழ் சினிமா பார்க்க வேண்டும், தமிழ் பாட்டு கேட்க வேண்டும், அப்போதுதான் நம்ம ஊரோடு ஒத்துப் போக முடியும். நான் "தமிழ் பாட்டெல்லாம் கேட்க மாட்டேன், என்று சீன் போட்டாங்க என்றால் ஓரம்போ" என்று கூறிவிடுவேன்.
நம்ம பாட்டு பற்றி நிறைய பேச வேண்டும். பழைய நினைவுகள், பாடல்களின் ரெஃபரென்ஸ் கொடுத்து கவுண்டர் கொடுக்க வேண்டும். நான் சிரித்துக் கொண்டிருக்கும் போது அவங்க அமைதியா இருந்தால் , எனக்கு வைப் ஆகாது , என் சிரிப்பும் உடனடியாக நின்று விடும் , அதற்கு நம் மொழி, நம் பழக்கவழக்கங்கள் தெரிந்திருப்பது அவசியம் என்ற ரீதியில் ஜேசன் சஞ்சய் பேசியுள்ளார்.
ஜனநாயகன் வெளியீட்டிற்காக தள்ளி வைக்கப்பட்ட ஜேசன் சஞ்சயின் சிக்மா திரைப்பட வெளியீடு, தற்போது அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.