

முதல்வர் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படத்தில் இடம் பெற்ற குட் டச் பேட் டச் விழிப்புணர்வு காட்சியை பார்த்துவிட்டு தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் குறித்து தனது தந்தையிடம் தைரியமாக தெரிவித்துள்ளார் 8 வயது சிறுமி. தாயார் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் மீது சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை காவல்துறை கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவம் பற்றிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பலவிதங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த கடைசிப் படமாக கருதப்படும் 'ஜனநாயகன்’ பல தடைகளைத் தாண்டி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. விஜய் நடிப்பில் வெளியான அரசியல் பின்னணி கொண்ட ஆக்ஷன் திரைப்படம் என்பதாலும் விஜய்யின் 69-வது மற்றும் இறுதித் திரைப்படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும் விஜய் சினிமாவிலிருந்து அரசியல் களத்துக்கு முழுமையாக நகரும் முன் வெளியான திரைப்படம் என்பதால், அவரது ரசிகர்களுக்கு இது ஒரு திரைப்படம் என்பதைத் தாண்டிய விஜயின் பிரியாவிடை நிகழ்வாக பார்க்கப்பட்டது .அத்துடன் படத்தின் அரசியல் கருப்பொருளும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
நடிகராக விஜய் ரசிகர்கள் படத்தை ரசித்து பெரும் வெற்றி என கொண்டாடினாலும் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தில் வரும் சில காட்சிகள் சமூக விழிப்புணர்வை குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலை சரியான முறையில் கையாண்டற்கு சாட்சியாக உள்ளது மேலே குறிப்பிட்ட போக்சோ வழக்கு.
இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட சிறுமியின் தாய் கோடம்பாக்கத்தில் உள்ள பெரியன் என்பவரின் வீட்டில் மகளுடன் தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அவ்வப்போது தந்தையை பார்க்க செல்வார் அவர். அப்படி கடந்த 30ஆம் தேதி தந்தையை காணச்சென்ற சிறுமியை அவரது தந்தை ஜனநாயகன் படத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
ஜனநாயகன் படத்தில் ஒரு காட்சியில் பள்ளிக் குழந்தைகளிடம் குட் டச் பேட் டச் பற்றி எடுத்துச் சொல்லி இருப்பார் விஜய். அதில் 'தங்களை யாராவது தவறாக தொட்டால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்' என விஜய் கூறுவார். விஜய் பேசிய அந்த வசனத்தை பார்த்த சிறுமி பெரியன் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லைகள் கொடுத்ததை அவரது தந்தையிடம் கூற உடனடியாக அவரது தந்தை காவல்துறை புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து பெரியன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே சினிமா என்பது நம்மோடு இணைந்த அங்கமாகி விட்டது என்றால் மிகையாகாது. நல்லது கெட்டது இரண்டையும் கலந்து தரும் சினிமாவில் நாம் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். காந்தி திரைப்படம் பார்த்து காந்தியின் வாழ்க்கை மற்றும் சுதந்திர வரலாறு அறிந்து கொண்ட இன்றைய தலைமுறையினர் உள்ளனர்.
அதேபோல் 1978-ல் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன்–ஸ்ரீதேவி நடித்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ எனும் திரில்லர் படத்தைப் பார்த்த தாக்கத்தால் ஒருவர் கொலை செய்ததாகக் கூறப்படும் செய்திகளும் அந்தக் காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் உண்மை இருந்ததா என்பது உறுதியாக வில்லை எனினும் சிவப்பு ரோஜாக்கள் அன்று ஆண் பெண் உறவு சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு தந்தது என்றே கூறப்பட்டது.
இதுபோன்ற மற்றொரு சம்பவம் தொடர்பான பதிவு உள்ளது.2000-களில் வெளியான ஒரு செய்தி அறிக்கையில், சென்னையின் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற நபர் 9-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்ததாகவும், 1984-ம் ஆண்டு வெளியான ‘நூறாவது நாள்’ திரைப்படம் அவரது குற்றச்செயல்களுக்கு தூண்டுதலாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி நிறைய படங்களை வரிசைபடுத்தலாம்.
தற்போது ஜனநாயகன் பார்த்து அந்த சிறுமி குட் டச் பேட் டச் பற்றி அறிந்து கொண்டார் என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம் ஏ சான்றிதழ் பெற்ற ஜனநாயகனைப் பார்க்க 8 வயது சிறுமி எப்படி அனுமதிக்கப்பட்டார் எனும் கேள்வி எழுகிறது.. இதை காவல்துறை விசாரணை பார்த்துக் கொள்ளும்.
இந்த சம்பவத்தில், திரைப்படத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு காட்சி ஒரு குழந்தைக்கு தனக்கு நேர்ந்ததை அடையாளம் கண்டு பெற்றோரிடம் சொல்லும் துணிச்சலை ஏற்படுத்தியதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்ல மாற்றத்தையும் உருவாக்க முடியும் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் உதாரணமாக இருக்கலாம். சினிமா ஏற்படுத்தும் நல்ல தாக்கங்கள் தவறை அடையாளம் காண உதவும்.
குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறல் போன்ற விஷயங்களை விழிப்புணர்வு காட்சிகள் எடுத்துச் சொல்லும்போது, தங்களுக்கு நேரிடும் தவறான நடத்தையை குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு தெளிவாக பேசும் தைரியம் கிடைக்கும்:
குறிப்பாக “யாரிடமும் சொல்லக்கூடாது” என்று அச்சுறுத்தப்பட்டிருந்தாலும், திரைப்படத்தில் பார்த்த நிகழ்வுடன் தங்களது அனுபவத்தை ஒப்பிட்டு பெற்றோரிடம் சொல்லும் துணிச்சல் ஏற்படலாம்.
அதே சமயம் பெற்றோரும் விழிப்புணர்வு பெறுவார்கள். குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பது, அவர்களுடன் திறந்த உரையாடல் நடத்துவது போன்றவற்றை சினிமா வலியுறுத்த முடியும்.
குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள், பெண்கள் பாதுகாப்பு, மனநலம், சாலை பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து ஒரு சினிமாவில் எளிதாக மக்களிடையே விவாதத்தை உருவாக்கலாம். போக்சோபோன்ற சட்டங்கள் இருப்பது, புகார் அளிப்பது, உதவி கேட்பது போன்ற தகவல்கள் மக்களை விழிப்புடன் இருக்க திரைப்பட காட்சிகள் உதவும்.
மேலும்கல்வி, உழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு போன்றவற்றை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் பார்வையாளர்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
ஆகவே ஒரு திரைப்படத்தில் வரும் விழிப்புணர்வு காட்சி, வெறும் சில நிமிட காட்சியாக இல்லாமல், ஒரு குழந்தை தனக்கு நடந்த தவறை புரிந்துகொண்டு அதை நம்பிக்கையான பெரியவரிடம் சொல்லும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று இந்த சமங கூறலாம்.
அதே நேரத்தில், திரைப்படம் மட்டும் போதாது. குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற தொடுதல், ரகசியமாக வைத்திருக்கச் சொன்னாலும் நம்பிக்கையான பெரியவரிடம் கூறுதல் போன்ற அடிப்படை விழிப்புணர்வை பெற்றோர் மற்றும் பள்ளிகளும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே அனைவரது கருத்து.