

நடிகர் விஜய்யை வைத்து ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கியவர் ஹெச்.வினோத். ஜனநாயகன் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, சென்சார் போர்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பலமுறை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அந்த திரைப்படம் முழுமையாக ஆன்லைனில் வெளியாகி தமிழ்திரை உலகில் பெரிய பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் ஹெச்.வினோத் தனது அடுத்த படத்தின் கதாநாயகனாக பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜை நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்பே வினோத்தும் நட்ராஜும் இணைந்து ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளனர். ஹெச்.வினோத் முதன் முதலாக சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நாயகனாக நட்ராஜ் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் காந்திபாபுவாக நடித்திருந்த அவர், தனது சிறப்பான நடிப்பின் மூலம் படத்திற்கு பெரிய வெற்றியை தேடி தந்தார். அந்த திரைப்படத்தில் நட்ராஜின் நடிப்பு மட்டுமல்லாமல் , படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தில் ,ஒருவரை எவ்வாறு அவரது ஆசைகளை தூண்டி விட்டு ஏமாற்றுவது என்று காட்டியிருப்பார்கள்.
இந்த திரைப்படம் தமிழகத்தின் அந்தந்த கால ட்ரெண்டிங் படி, என்னன்ன வித்தைகளை காட்டி மக்களை சிலர் முட்டாளாக்குகிறார்கள் என்பதை விறுவிறுப்பான காட்சிகள் மூலம் ஹெச்.வினோத் சொல்லி இருப்பார்.முதல் படத்திலேயே மிகவும் திறமையான இயக்குனர் என்ற பெயரை பெற்ற ஹெச்.வினோத் , தனது அடுத்த திரைப்படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தில் எடுத்து வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.
சதுரங்க வேட்டை திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் , அவர் கார்த்தியை கதாநாயகனாக வைத்து , ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்துடன் தீரன் அத்தியாயம் 1 திரைப்படத்தின் இயக்கி இருந்தார். இந்த திரைப்படமும் நல்ல வெற்றி பெற , அடுத்ததாக அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற ரீமேக் திரைப்படத்தின் எடுத்தார். இந்த திரைப்படம் வினோத்திற்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறியவர் தொடர்ந்து அஜித்தின் அடுத்த திரைப்படமான துணிவு படத்தையும் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் கார்ப்பரேட் வங்கிகள் எவ்வாறு மக்களை மடைமாற்றி தங்களது வியாபாரத்தை பெருக்கிக் கொள்கிறது, அதற்காக தங்களின் பணியாளர்களை அதிக அழுத்தம் கொடுத்து எவ்வாறு கொடுமைப்படுத்துகிறது என்பதையும் விளக்கி இருந்தது. துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எவரும் எதிர்பாராத நிலையில் , விஜயின் இறுதி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு ஹெச்.வினோத்திற்கு வந்தது.
தற்போது ஜனநாயகன் திரைப்படமும் முடிந்துள்ளதால் வினோத் தனது அடுத்த திட்டத்தில் தனது முதல் பட கதாநாயகனான நடராஜை வைத்துள்ளார். எச்.வினோத் புதிதாக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்திலும் நடராஜை வைத்து படம் தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை அவரது உதவி இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளன , அது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.