விமர்சனம்: ஜோஷுவா இமை போல் காக்க!
ஸ்டைல் புதுசு - கதை பழசு(3.5 / 5)
நியூயார்க் நகரத்தில் வழக்கறிஞராக உள்ள குந்தவி (ராஹி) ஒரு போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை தர முயற்சிக்கிறார். இவரை கொல்ல கடத்தல் தலைவனின் ஆட்கள் முயற்சிக் கிறார்கள். சென்னை வரும் குந்தவிக்கு சர்வதேச கொலைக் குற்ற வாளியான ஜோஷுவா பாதுகாப்பு தருகிறார். குந்தவியை கொல்ல வரும் ஆட்களை வீழ்த்துகிறார். கண்ணை இமை காப்பது போல் குந்தவியை காக்கிறார் ஜோஷுவா. ஒரு கட்டத் தில் இந்த போதை பின்னணியில் தன் தந்தை இருப்பது தெரிய வர குந்தவி ஒரு முடிவை எடுக்கிறார்.
கெளதம் மேனன் படங்கள் என்றாலே ஆங்கிலம் அதிகமாக பேசும் மனிதர்கள், அழகான கேமரா ஒர்க், பைக் பயணம், கண்டதும் காதல், அழகான ஹீரோயின் இப்படி பல விஷயங்கள் நீக்க மற ஜோஷுவா படத்திலும் நிறைந்துள்ளன.ஒரு பெண்ணை காப்பாற்றுவது என்ற ஒற்றை விஷயத்தை நோக்கி தான் திரைக்கதை இரண்டாம் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை செல்கிறது. படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமே ரசிக்கும்படி உள்ளது.ஹீரோயின் இருப்பிடத்தை கண்டறிவது, திடீரென தாக்கும் மனிதர்கள் என பரபரப்புக்கு பஞ்சமில்லை.
படத்தில் பல கேரக்டர்கள் ஆங்கிலமே பேசிக் கொண்டிருப்பதால், நாம் ஆங்கில படத்திற்கு வந்துவிட்டோமோ என்று எண்ணத்தோன்று கிறது. SR கதிரின் ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு செல்கிறது. காட்சியின் பிரமாண்டத்தில் ஆர்ட் டைரக்டர் குமார் ஞானப்பன் தெரிகிறார். கார்த்தியின் பின்னணி இசை கூடுதல் பலம். ஒரு க்ரைம் ஆக்ஷன் திரில்லர் படத்திற்கு தேவையான உழைப்பை தந்துள்ளார் சண்டை பயிற்ச்சியாளர் யானிக் பென்.
வருண் என்ற நடிகரை ஜோஷுவா படம் அடையாளம் காட்டி உள்ளது. தமிழில் ஒரு நல்ல ஆக்ஷன் ஹீரோ கிடைத்துவிட்டார் என்று தாராளமாக சொல்லலாம். உடல் மொழியில் ஆக்ஷனும், முகத்தில் காதலையும் தந்து பிரமாதம் என சொல்ல வைக்கிறார் வருண்.
ராஹி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நல்ல சாய்ஸ். சரியான கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம்.
கிட்டி (கிருஷ்ணமூர்த்தி ) மீண்டும் வில்லனாக மிரட்டியுள்ளார். உடலில் முதுமை தெரிந்தாலும் குரலிலும் உடல் மொழியிலும் பழைய கிட்டிதான். படத்தில் இருக்கும் சில வன்முறை காட்சிகளை பொறுத்து கொண்டால், படத்தை ரசிக்கலாம்.