தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் இன்று வெளியான துடரும் படத்தின் முதல் சாய்ஸ் இந்த நடிகை என்று தருண் பேசியிருப்பதைப் பார்ப்போம்.
1980ம் ஆண்டு தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷோபனா, 1984ம் ஆண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமானப் படங்கள் நடித்துவந்தார். குறிப்பாக, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் நிறைய படங்கள் நடித்த இவர், தமிழில் கடைசியாக கோச்சடையான் படத்தில் நடித்தார். அதேபோல் மலையாளத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடிக்காத ஷோபனா, ஒரு மலையாள படத்தில் நடிக்கவுள்ளதாக சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு வீடியோ வெளியிட்டு அறிவித்தார்.
ஆம்! தருண் மூர்த்தி இயக்கிய மோகன்லாலின் 360 படமான துடரும் படம் பற்றிதான் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு முதலில் இவரைதான் அணுகினோம் என்று தருண் மூர்த்தி சமீபத்திய ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அதாவது, “லலிதாவாக நடிக்க எங்கள் மனதில் முதலில் தோன்றியவர் ஷோபனாதான். ஆனால் அவரை எப்படித் தொடர்புகொள்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதனால் அடுத்ததாக ஜோதிகாவை முடிவு செய்தோம். கதையைக் கேட்டதும் ஜோதிகாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுபோன்ற படங்கள் ஏன் தமிழில் எடுக்கவில்லை என்று கூட கேட்டார்.
அவர் படத்தில் நடிக்க கூட ஒப்புக்கொண்டார். ஆனால், படபிடிப்பு நடைபெறும் நேரத்தில் அவர் அவரது குடும்பத்துடன் வேர்ல்டு டூர் போவதாகவும், இதனால், நடிப்பது கஷ்டம் என்றும் கூறிவிட்டார். பின்னர் மீண்டும் ஷோபனாவை அணுக முடிவு செய்தோம். ஸ்கிரிப்டைக் கேட்ட பிறகு, ஷோபனாவுக்கும் பிடித்திருந்தது. உடனே அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.” என்றார்.
ஷோபனா மற்றும் மோகன்லால் ஆகியோர் தென்மவின், கொம்பத்து, பவித்ரம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆகையால், மலையாள சினிமா ரசிகர்களுக்கு, அவர்கள் மிகவும் பிடித்தமான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு ஜோடியாகும். இதனையடுத்து மீண்டும் அவர்கள் இணைவது மலையாள சினிமாவில் ஒரு பெரிய எதிர்பார்ப்பாக அமைந்தது.
அதேபோல், இயக்குனர் தருண் மூர்த்தியின் மூன்றாவது படமான இப்படம், அவரது சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான படம் என்றே கூறலாம்.