
ஊறுகாய் காய்ந்துவிட்டால், அதில் அரை டீஸ்பூன் கரும்புச்சாறு சேர்க்க சுவையான புதிய ஊறுகாய் தயார்.
வேகவைத்த உருளைக்கிழங்கு தோல்களை வீணாக்காமல் அதை பயன்படுத்தி வீட்டில் உள்ள கண்ணாடிகளை துடைத்துப் பாருங்கள். கண்ணாடி பளிச்சென்று ஆகிவிடும்.
கறிவேப்பிலை காய்ந்துவிட்டால் குப்பையில் கொட்டாதீர்கள். இட்லி அவிக்கும்போது பானையின் நீரில் போட்டு அவித்தால் இட்லி நல்ல மணத்துடன் இருக்கும்.
பால் முறிந்துவிட்டால், முறிந்தபால் ஆறிய பின் மிக்ஸியிலிட்டு ஓட்டுங்கள். பிறகு உறை வையுங்கள். பால் நன்கு உறைந்து எந்த வித வேறுபாடும் இல்லாமல் நன்றாக இருக்கும்.
தர்பூஸ் தோலை பாழாக்க வேண்டாம். அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிளகுத்தூள், உப்புத்தூள் தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்ற சுவையுடனும், வித்தியாசமான மணத்துடனும் இருக்கும்.
இட்லிமாவு கொஞ்சம்போல் மீந்துவிட்டால் அதை சமையலறையில் இருக்கும் எண்ணெய்ப் பசையுள்ள பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் காய்கறிச் செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் செழிப்புடன் வளரும்.
எந்தப் பொரியலாக இருந்தாலும் அது மீந்துவிட்டால், அதில் கொஞ்சம் கடலை மாவும், வெங்காயமும் சேர்த்து பிசைந்து எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாக பொரித்துச் சாப்பிடலாம்.
காய்ந்த வேப்பிலைகளை தூளாக்கி, சாம்பிராணி சேர்த்து புகை போட்டால் வீட்டில் கொசுத் தொல்லை அறவே நீங்கிவிடும்.
கமலா ஆரஞ்சுப்பழத்தின் தோல்களை சுத்தப்படுத்தி, எண்ணையில் வதக்கி, உளுந்து மிளகு சேர்த்து சுவையான துவையல் செய்யலாம்.
முட்டையை வேக வைத்த பின் அந்த நீரைக் கீழே கொட்டாமல், நன்கு ஆறியபின், வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் செடியின் வேர்ப்பகுதியில் ஊற்றினால், செடிகளுக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும்.
மோர் புளித்துப்போய்விட்டதா? அதில் புழுங்கல் அரிசியையும், உளுத்தம் பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்து உடனே தோசை வார்க்கலாம். தோசை ருசியாக இருக்கும்.