
முத்துவேல் கருணாநிதி முத்து (மு. க. முத்து ) மறைந்த முதலமைச்சர் கலைஞா் கருணாநிதி அவர்களின் மூத்த மகன்.
14.1.1948ல் பிறந்த அவர், 19.7.2025ல் காலமானாா். அவருக்கு வயது 77.கலைஞர்கருணாநிதி- பத்மாவதி தம்பதிகளின் மூத்த மகன் .
கருணாநிதி அவர்களின் மனைவி பத்மாவதி மறைந்த இசை மாமேதை சிஎஸ் ஜெயராமன் அவர்களின் சகோதரியாவாா்.
கலையுலக பிரம்மா, கலைஞானம், கவிதை நயம் ,சிறந்த வசனகர்த்தா, அரசியல்வாதி, திமுகவின் தலைவர், முதல்வர், கருணாநிதி வழி வந்தவர் மு.க முத்து.
கருணாநிதி - எம் ஜிஆா் கருத்து மோதலால் திரையுலகில் நடிகராக களம் இறக்கப்பட்டவர். அந்த கசப்பான சம்பவம் தான் எம்.ஜி.ஆா் எனும் மாபெரும் சக்தியால் அதிமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டது என சொல்லப்பட்டது. பல்வேறு காரணங்கள் அமைந்தபோதிலும் மு.க. முத்துவின் கலையுலக பிரவேசமும் முக்கியமானதே.
திரையுலகில் நடிகராக களம்இறக்கப்பட்டு, பூக்காாி, பிள்ளையோபிள்ளை, சமையல்காரன், அணையாவிளக்கு, போன்ற படங்களில் நடித்தாா்.எம் ஜி ஆரைப்போல அவருக்கு மாற்றாக மாபெரும் சக்தியாக உருவாகியுள்ளாா் என்ற பிம்பமும் அப்போது கட்டமைக்கப்பட்டது.
அவர் நடித்த படங்கள் ஓரளவு வெற்றி பெற்றன, இருந்த போதிலும் ஏனோ கலையுலகில் மு.க.முத்துவால் பரிபூரணமாக பிரகாசிக்க முடியவில்லை. அதே நேரம் மு.க முத்து நல்ல பாடகர் ,அவர் நடித்த சமையல்காரன் திரைப்படத்தில் சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க என்ற பாடலை சொந்தக்குரலில் பாடினாா்.அதேபோல் நல்ல மனதில் குடியிருக்கும் நாகூா் ஆண்டவா பாடலையும் சொல்லலாம்.
கலையுலக பிரும்மா, அஷ்டாவதாணி, பன்முகம் கொண்ட கலைஞரின் மகன் என்ற பேனர் ஒருபுறம், சி.எஸ் ஜெயராமன் சகோதரி பத்மாவதி அம்மையாாின் இசைக்குடும்பம் என்ற கட்டமைப்பு இருந்தாலும் ,ஏனோ மு.க.முத்து மின்னல் போல ஜொலிக்க முடியவில்லை. அவருக்கு மனைவி, மகன் அறிவுநிதி, மகள் தேன்மொழி ஆகியோா் உள்ளனர்.
தகப்பனாா் கருணாநிதியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக எம்.ஜி.ஆா் அவர்களின் அதிமுகவில் இணைந்தாா். பின்னா் பல ஆண்டுகள் கழித்து அப்பா மகன் கருத்து வேறுபாடு களையப்பட்டு தகப்பனாரோடு சோ்ந்தாா்.
சொந்தக்காரர்கள் நிறைய நபர்கள் இருந்த போதிலும் அவர்களின் அன்பை இவர் சொத்தாக மதித்தாலும், ஏனோ இவரால் கலையுலகிலும் ,அரசியலிலும் சரிவர கால் பதிக்க முடியாமல் போனது என்னவோ வேதனையான விஷயமே!
மின்னல் போல மிளிர்ந்தாா் மின்னல் போலவே மறைந்து விட்டாா்.